அந்தக் கதையை இப்போது தொட முடியாது: தியாகராஜன் குமாரராஜா

By செய்திப்பிரிவு

அந்தக் கதையை இப்போது தொட முடியாது என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா குறிப்பிட்டுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் (மார்ச் 29) ஓராண்டு ஆகிறது. இந்தப் படம் தொடர்பாக இப்போது வரை சமூகவலைதளத்தில் பாராட்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது.

முன்னதாக, 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பிறகு கதையொன்றைத் தயார் செய்தார் தியாகராஜன் குமாரராஜா. அந்தக் கதைக்கு பெரும் பொருட்செலவு தேவைப்பட்டதால் அந்தக் கதையை அப்படியே வைத்துவிட்டு, 'சூப்பர் டீலக்ஸ்' கதையை எழுதி இயக்கினார். தற்போது தான் எழுதிய 2-ம் கதை குறித்துப் பதிலளித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

அதில், "கண்டிப்பாக அந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாத்தியங்கள் இருந்தால் உடனடியாக ஆரம்பித்துவிடுவேன். ஆனால் இன்னமும் சந்தை அப்படி ஒரு படத்துக்குத் தயாராக இல்லை என நினைக்கிறேன். கண்டிப்பாக இதை விடப் பெரிய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் படம் எப்படி வசூலிக்கும், போட்ட பணத்தைத் திரும்பப் பெறுமா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. அது மக்களின் புத்திசாலித்தனத்துக்கு வேலை கொடுக்கும்

கதையாக இருக்கும். ஆனால் உணர்வுப்பூர்வமாக இருக்குமா என்று தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ் புரியவில்லை என்று பலர் சொல்லிக் கேட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். எனவே நான் அந்தக் கதையை இப்போது தொட முடியாது. 'சூப்பர் டீலக்ஸ்' சற்று மாறுபட்ட படம் என்று வைத்துக்கொண்டால், இது அதையெல்லாம் தாண்டி எங்கேயோ இருக்கும். என்னிடம் பணம் இருந்தால் நான் எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE