கரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடல்: தெலுங்கு திரையுலகினர் வெளியீடு

கரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடலொன்றை வெளியிட்டு சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுன, வருண் தேஜ் மற்றும் சாய் தரம் தேஜ் உள்ளிட்டோர், கரோனா கிருமித் தொற்று குறித்த விழிப்புணர்வுப் பாடல் ஒன்றில் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இந்தப் பாடலுக்காக நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

கரோனா தொற்று பீதி காரணமாகத் தேசிய ஊரடங்கு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சினிமா நட்சத்திரங்களும் வீட்டிலேயே இருந்து, தங்களது ரசிகர்களுக்கும் தொடர்ந்து கரோனா பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்படி, இந்த கரோனா தொற்றை வீட்டிலிருந்தபடியே எதிர்ப்போம், சுகாதாரம், தள்ளியிருத்தல் ஆகியவற்றை பின்பற்றி ஒழிப்போம் என்ற கருத்தோடு ஒரு பாடல் வீடியோ தயாராகியுள்ளது. கோடி இதற்கு இசையமைத்துள்ளார். இந்த வீடியோவில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வருண் தேஜ் என அனைவரும் தங்களது வீட்டிலிருந்தபடியே நடித்துள்ளனர்.

இந்த பாடல் வீடியோவை, "இதோ ஒரு தனித்துவமான பாடல். வீட்டிலிருந்தபடியே பதிவு செய்யப்பட்டு, கரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.

மேலும் விருப்பம் இருப்பவர்கள் இந்தப் பாடலைப் பாடி, அதில் வீட்டிலிருந்தபடியே நடித்து, அதை creatives4ccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீடியோக்கள் தொகுக்கப்பட்டு இந்த பாடல் வீடியோவில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கரோனா நெருக்கடிக்கான ஒரு தொண்டமைப்பை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் கடந்த வாரம் தொடங்கினர். தெலுங்கு சினிமாத் துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கான நிதியைத் திரட்டவும், அவர்கள் நலன் காக்கவும் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகவே இந்த பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE