மீண்டும் 'சக்திமான்': இரண்டாம் பாகத்தை உறுதி செய்த முகேஷ் கன்னா

By செய்திப்பிரிவு

'சக்திமான்' தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளதை அந்தத் தொடரின் தயாரிப்பாளரும் நாயகனுமான முகேஷ் கன்னா உறுதி செய்துள்ளார்.

90களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தொடர் 'சக்திமான்'. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்று அறியப்படும் 'சக்திமான்' செப்டம்பர் 1997-ம் ஆண்டு ஆரம்பித்து மார்ச் 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. ஆனால் இன்று வரை 'சக்திமான்' தொடரைப் பற்றிய பகிர்வுகள், உரையாடல்கள் சமூக ஊடகங்களில் தொடர்கின்றன.

பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார். இந்திய மக்களிடையே, குறிப்பாகச் சிறுவர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது 'சக்திமான்'. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சக்திமானைப் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது.

தற்போது தேசிய ஊரடங்கினால் பழைய பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களை சில சேனல்கள் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. டிடி தொலைக்காட்சியிலும் ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகிறது. எனவே சக்திமானும் அப்படி ஒளிபரப்பாகுமா என்று பல ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர்.

சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய முகேஷ் கன்னா, "கடந்த மூன்று வருடங்களாக சக்திமானின் இரண்டாவது பாகத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன். அது சமகாலத்துக்கு ஏற்ற மாதிரியும், அதே சமயம் நமது கலாச்சாரத்தை ஒட்டியும் இருக்கும். சக்திமானுக்கு என்ன ஆனது என்று பலரும் தெரிந்துகொள்ள விரும்புவதால் நாங்கள் இந்த இரண்டாம் பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சூழல் சகஜமானவுடன் இரண்டாம் பாக ஒளிபரப்பு குறித்துத் தெளிவாகச் சொல்லும் நிலையில் இருப்பேன். ஏனென்றால் அதற்கான எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE