கரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் கோபி மகன்

By செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, தன் மகன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால், பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இதனிடையே மலையாள நடிகரும் பாஜக உறுப்பினருமான சுரேஷ் கோபி, லண்டனிலிருந்து திரும்பிய தனது மகன் சுய தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் சுரேஷ் கோபியின் இளைய மகன் பயணித்த ஒரு விமானத்தில், கரோனா தொற்று இருந்த ஒருவரும் பயணித்ததால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இவர்களுக்கான உணவைத் தனது ஓட்டுநர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று தந்துவிட்டு வருவதாகவும், இந்த தனிமைக் காலம் முடிந்தவுடன் அந்த ஸ்கூட்டரை எதற்காகவும் பயன்படுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் வீட்டில் இருப்பதைப் பற்றிப் பேசிய சுரேஷ் கோபி, "இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நான் எனது வீட்டின் வாசலுக்குக் கூட செல்லவில்லை. ஏனென்றால் இந்தத் தொற்றின் தீவிரம் எனக்குத் தெரியும். நான் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை டெல்லி சென்று வந்தவன்.

படங்களுக்காகவும், கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்காகவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். என்னால் முடியும் என்றால் அனைவராலும் முடியும். வீட்டில் இருக்கும் இந்தக் காலகட்டத்தைச் சர்வதேச சமூகத்தின் நலனுக்கான தனிப்பட்ட பிரார்த்தனையாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE