செவிலியர் பணிக்கு ஏன் திரும்பவில்லை? ரசிகரின் கேள்வியும் ஜூலியின் பதிலும்

செவிலியர் பணிக்கு ஏன் திரும்பவில்லை என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ஜூலி பதிலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகளால் கடும் எதிர்வினைக்கு ஆளானார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கிடைத்த பெயர் அப்படியே பிக் பாஸ் சர்ச்சையால் மங்கிப் போனது.

தற்போது பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே இருக்கிறார் ஜூலி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

முதலில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார் ஜூலி. பிரபலமானதைத் தொடர்ந்து செவிலியர் பணியைக் கைவிட்டு விட்டார். இதையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி கலந்துரையாடும்போது ஒருவர் கேள்வியாக எழுப்பினார். "நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மீண்டும் உங்கள் செவிலியர் பணிக்குத் திரும்பவில்லையா?” என்று ஜூலியிடம் கேட்டார்.

அதற்கு ஜூலி கூறியிருப்பதாவது:

"அனைவரும் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். செவிலியர் பணி என்பது ஒரு புனிதமான தொழில். அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. மற்ற வேலைகளைப் போல பணியைப் பகுதி நேர வேலையாகச் செய்ய இயலாது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகளைச் செய்வது மிகவும் கடினம். ஏனெனில் படப்பிடிப்பினால் வேலைக்குச் செல்வதில் தாமதமாகலாம். நோயாளிகள் காத்திருக்க நேரிடும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க இயலாது".

இவ்வாறு ஜூலி பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலைத் தனது ட்விட்டர் பதிவிலும் பதிவிட்டுள்ளார் ஜூலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE