என் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்: 'ஓ மை கடவுளே' இயக்குநர்

By செய்திப்பிரிவு

என் அனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன் என்று 'ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தப் படக்குழுவினரை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்திருந்தார். மேலும், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவும் தீவிரமான கௌதம் மேனன் ரசிகர். இதனைப் பல பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கௌதம் மேனனை இயக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, அப்படியே வீட்டில் ப்ரேம் செய்து மாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அஷ்வத் மாரிமுத்து, "என்றென்றைக்குமானது. என் சுவரில் மாட்டப்பட்ட முதல் புகைப்படம். உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்குத் தெரியும்.

நான் சினிமாவுக்குள் வருவதற்கான ஒரே உந்து சக்தி நீங்கள் மட்டுமே. என்னுடைய படங்கள் அனைத்தையும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன். நான் ஆச்சரியத்துடன் பார்த்து வளர்ந்த ஒரு அற்புதமான மனிதராக இருந்தமைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE