கரோனா நோயாளிகளுக்காக நர்ஸாக மாறிய நடிகை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பாலிவுட் நடிகை ஒருவர் நர்ஸாக மாறியுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகையான ஷிகா மல்ஹோத்ரா வெறும் அறிவுரை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாகவும் மாறியுள்ளார்.

இது குறித்து ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் முடித்திருக்கிறேன். 5 ஆண்டுகள் நர்ஸாகவும் பணிபுரிந்திருக்கிறேன். எனவே, என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்காக மருத்துவமனையில் நான் பணிபுரியும் புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன். என்னுடைய முயற்சிகளையும் சாதனைகளையும் நீங்கள் எப்போதும் பாராட்டியே வந்துள்ளீர்கள். அதேபோல நாட்டுக்கு சேவையாற்ற இப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது.

கோவிட்-19 அச்சுறுத்தலால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் வேலைக்குச் சேர முடிவு செய்தேன். ஒரு நடிகையாகவும் ஒரு நர்ஸாகவும் என்னால் முடிந்தவரை நாட்டுக்குச் சேவை செய்வேன். உங்கள் ஆசிர்வாதங்கள் எனக்குத் தேவை. தயவுசெய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்''.

இவ்வாறு ஷிகா மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE