யூ டியூபில் வெளியாகும் ‘ஜில் ஜங் ஜக்’: இயக்குநர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் யூ டியூபில் வெளியாகும் என இயக்குநர் தீரஜ் வைத்தி கூறியுள்ளார்.

சித்தார்த், சனந்த், ராதாரவி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஜில் ஜங் ஜக்'. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்படத்தை தீரஜ் வைத்தி இயக்கியிருந்தார். போதைப் பொருள் கடத்தலை நகைச்சுவையாக சொன்ன இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சுமாரான வெற்றியைப் பெற்றது.

தற்போது இப்படம் யூ டியூபில் ஆங்கில சப் டைட்டிலோடு பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இதை 'ஜில் ஜங் ஜக்' பட இயக்குநர் தீரஜ் வைத்தி உறுதி செய்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தீரஜ் வைத்தி கூறுகையில், ''என்னிடம் ஒரு நல்ல செய்தி உள்ளது. அது எனக்கு மிகவும் நல்ல செய்தி. ஏப்ரல் 1 ஆம் தேதி யூ டியூபில் 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் சப் டைட்டிலோடு வெளியாக உள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த்துடன் பேசிய உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

எந்த தயாரிப்பாளர் இப்படி சொல்வார்?'' எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்துடன் பேசிய உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்டையும் தீரஜ் வைத்தி பகிர்ந்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள உரையாடல் பின்வருமாறு:

தீரஜ்: சார் உலகம் இக்கட்டான சூழலில் இருக்கிறது. இப்போது இந்த விஷயத்தை உங்களிடம் கொண்டு வருவதில் தயக்கமாக இருக்கிறது. இப்போது 'ஜில் ஜங் ஜக்' படத்தை ஈடாகி நிறுவனம் யூ டியூபில் பதிவேற்றம் செய்வார்களா? இது சுயநலம்தான். எனக்குத் தெரியும். ஆனால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு போரடிக்கும். மக்கள் பேசக்கூடிய விஷயமாக இது இருக்கும்.

சித்தார்த்: உங்கள் சொந்த சேனலிலேயே அதை ஒளிபரப்ப விரும்புகிறீர்களா? யாரும் நம்மிடம் காப்பிரைட் உரிமை தொடர்பாக கேட்கப் போவதில்லை என்று நினைக்கிறேன். அப்படிக் கேட்டால் அவர்கள் முயற்சி செய்து பார்க்கட்டும். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். இது உங்கள் படம். அதைத் திரையிடும் உரிமையை நான் உங்களுக்குத் தருகிறேன்.

தீரஜ்: நிச்சயமாக. என்னிடம் ஏற்கெனவே ஒரு சேனல் உள்ளது.

சித்தார்த்: அப்போது உடனே செய்யுங்கள்.

தீரஜ்: சார். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE