தனது திருமண வரவேற்பைத் தள்ளிவைத்த யோகி பாபு

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறவிருந்த தனது திருமண வரவேற்பைத் தள்ளிவைத்துள்ளார் யோகி பாபு.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். பிப்ரவரி 5-ம் தேதி திடீரென்று திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.

தனது திருமணம் தொடர்பாக ட்விட்டர் பதிவில் யோகி பாபு, "இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து மஞ்சு பார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது" என்று பதிவிட்டார்.

இந்நிலையில் தனது திருமண வரவேற்பு தொடர்பாகத் திட்டமிட்டு வந்தார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதலில் மார்ச் 31-ம் தேதி யோகி பாபுவின் திருமண வரவேற்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஒரு வாரம் தள்ளி ஏப்ரல் 5-ம் தேதி திட்டமிட்டு பத்திரிகை எல்லாம் அச்சடித்து, கொடுக்கும் பணிகளையும் தொடங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு யோகி பாபு பத்திரிகை அளித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால், கரோனா முன்னெச்சரிக்கையால் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனது திருமண வரவேற்பைத் தள்ளிவைத்துவிட்டார் யோகி பாபு.

இது தொடர்பாக யோகி பாபுவிடம் கேட்ட போது, "இப்போதுள்ள சூழல் சரியாக வேண்டும் என்று, நான் வணங்கும் முருகனை வேண்டி வருகிறேன். 21 நாட்கள் ஊரடங்கு இருக்கும்போது எப்படி திருமண வரவேற்பு நடத்த முடியும். ஆகையால் இப்போதைக்கு அனைத்தையும் ஒத்திவைத்து விட்டேன். நிலைமை அனைத்தும் சரியானவுடன் தான் திருமண வரவேற்பைத் திட்டமிட வேண்டும்.

அதேபோல், இன்னொரு வேண்டுகோள். என் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் தளத்தில் வரும் செய்திகள் எல்லாம் என்னை ரொம்பவே வருத்தப்படச் செய்கிறது. அந்த ஐடிக்கள் அனைத்தையும் நீக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறேன். விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE