தொடர் எதிர்மறை விமர்சனங்கள்: ‘மெஸ்ஸையா’ தொடரை நிறுத்தும் நெட்ஃப்ளிக்ஸ்

By செய்திப்பிரிவு

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளால் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்த ‘மெஸ்ஸையா’ தொடர் முதல் சீஸனோடு நிறுத்தப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நாள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான தொடர் ‘மெஸ்ஸையா’. மைக்கேல் பெட்ரோனி இயக்கியுள்ள இயேசு மீண்டும்வருவது போல் இத்தொடர் எழுதப்பட்டுள்ளது. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளும் இத்தொடரில் ஏராளமாக இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இத்தொடரை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஒரே ஒரு சீசன் மட்டுமே வெளியாகியுள்ள ‘மெஸ்ஸையா’ தொடரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்தியுள்ளது. இதை ‘மெஸ்ஸையா’ தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வில் ட்ராவல் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''இன்று எனக்கு மிகவும் சோகமான நாள். ‘மெஸ்ஸையா’ தொடரின் இரண்டாவது சீஸன் வெளிவராது என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடமிருந்து எனக்குச் செய்தி வந்தது. ரசிகர்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் வேறு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்''.

இவ்வாறு வில் ட்ராவல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE