தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல: கமல்

By செய்திப்பிரிவு

தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தால் அவர்கள் வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டி வருகிறது சென்னை மாநகராட்சி. அதில் அவர் எவ்வளவு காலத்துக்குத் தனிமைப்படுத்தப்படுவார், பெயர் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இந்த நோட்டீஸ் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. அதில் கமலின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால், கமலுக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதை முன்வைத்து கமலுக்கு கரோனா என்று சமூக வலைதளத்தில் பலரும் பேசத் தொடங்கினார்கள்.

இந்தச் செய்தி மற்றும் வதந்தி தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகத் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE