சமூக விலகல் குறித்த கேலி பதிவு - மன்னிப்புக் கோரிய மார்வெல் நடிகை

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மார்வெல் நிறுவனத்தின் ‘ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப்’ பட நாயகியான எவாஞ்சலின் லில்லி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் சமூக விலகல் குறித்து கேலி செய்யும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘இப்போதுதான் என் மகன்களை ஜிம்னாஸ்டிக் வகுப்பில் விட்டுவிட்டு வந்தேன். அவர்கள் உள்ளே செல்லும் முன் கைகளை நன்கு கழுவிச் சென்றுள்ளார்கள். அவர்கள் விளையாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கின்றனர்.’ என்று கூறிவிட்டு முடிவில் ஒரு ஹாஷ்டேகில் ‘இது வழக்கம்தான்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் பின்னூட்டங்களில் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

‘வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அரசு சொன்ன பிறகும் இப்படி குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லலாமா? இது மிகவும் சுயநலம்’ என்று பலரும் லில்லியை கண்டித்தனர். அதில் ஒரு பின்னூட்டத்துக்கு பதில் கூறிய லில்லி, ‘சிலருக்கு வாழ்க்கையை விட சுதந்திரம் முக்கியம், சிலருக்கு சுதந்திரத்தை விட வாழ்க்கை முக்கியம். நாம் அனைவரும் நமக்கு பிடித்ததை தேர்வு செய்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார். லில்லியின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பிரபலங்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைவரும் லில்லியை கடுமையான முறையில் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (28.03.20) தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் லில்லி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

உலகமே கோவிட் 19 வைரஸ் காய்ச்சலால் துயரத்தில் இருக்கும் வேளையில் என்னுடைய பொறுப்பற்ற முந்தைய பதிவுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பெரியவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், சகோதர சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்த மிகப்பெரும் அச்சுறுத்தலை தடுக்க உலகமே போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் நான் நேரடியாகவும், தனியாகவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களை கஷ்டப்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை. ’

இவ்வாறு லில்லி தனது பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE