கரோனா வைரஸ் பாதிப்பு: அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால், அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதன் தினக்கூலி பணியாளர்களுக்கும் நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள். இதில் தெலுங்குத் திரையுலகின் பிரபலங்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். பிரபாஸ் 4 கோடி ரூபாய், பவன் கல்யாண் 2 கோடி ரூபாய், சிரஞ்சீவி 1 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், ஜூனியர் என்.டி.ஆர் 75 லட்ச ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் என நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் தற்போது அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார். தன் பங்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 தொற்று பலரது வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்த கடினமான சூழலில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரள மக்களுக்கு 1.25 கோடியை நன்கொடையாக அளிக்கிறேன். நாம் ஒன்றுபட்டுப் போராடி விரைவில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என நம்புகிறேன்”.

இவ்வாறு அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE