வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்

By செய்திப்பிரிவு

வைரமுத்து வரிகளில் தானே இசையமைத்துப் பாடி கரோனா விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 753 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடி, அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

இதனை ஏன் செய்தேன் என்பதற்கான காரணத்தையும் ஒரு வீடியோவாகப் பேசி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இந்தக் கடினமான சூழல் பற்றி எனக்குத் தெரிகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் என இவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மோசமான சூழலில் சிறப்பான விஷயங்களைப் பார்ப்போம். இந்த நேரத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனுள்ளதாகச் செலவிடுவோம்.

மருத்துவமனைகளில், கரோனா அறிகுறிகளால் வீட்டில் தனிமையில் இருப்பவர்களை, 3 வாரங்கள் வீட்டில் இருப்பவர்களை நினைப்போம். அவர்களுக்காக ஏதாவது செய்யலாம். நான் வெவ்வேறு மொழிகளில் கரோனா பற்றி சில பாடல்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

தற்போது ஒளிப்பதிவு செய்ய ஸ்டுடியோ செல்வதோ, இசைக் கலைஞர்களை வரவழைப்பதோ சாத்தியமல்ல. என் வீட்டில் ஸ்டூடியோ இருந்தாலும் ஒலிப்பதிவுக் கலைஞர் அவர் வீட்டில் இருக்க 3 வாரங்கள் விடுப்பு தந்திருக்கிறோம்.

எனவே, தானாக முன்னேற்பாடில்லாமல் ஏன் மக்களுக்கு உற்சாகம் தரும் பாடல்களை உருவாக்கிப் பாடக்கூடாது, பதிவு செய்யக்கூடாது என நினைத்தேன். எனவே, என் நண்பர்கள் சிலருக்குக் கோரிக்கை வைத்தேன். அவர்கள் பாடல் வரிகள் எழுதி உதவி செய்துள்ளனர். தமிழில் வைரமுத்து, தெலுங்கில் வெண்ணிலகண்டி ராஜேஸ்வர பிரசாத், கன்னடத்தில் ஜெயந்த் காய்கின்னி ஆகியோர் அனுப்பியுள்ளனர். இன்னும் மற்ற மொழிகளில் எழுதித் தருமாறும் சில நண்பர்களைக் கேட்டிருக்கிறேன். அதை மெட்டமைத்து உங்களுக்கு வழங்க இருக்கிறேன்.

இப்போதைக்கு இந்த மூன்று மொழிகளில் எனது மொபைலில் பாடல்களைப் பாடி பதிவு செய்துள்ளேன். எனவே பாடிப் பதிவேற்றியுள்ளேன். அதைக் கேளுங்கள். மற்றவர்களிடமும் பகிரலாம். அதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து அவர்கள் ஊக்கம் பெறட்டும்.

நாம் பல எதிரிகளிடம் போராடி வென்றிருக்கிறோம். இந்தக் கட்டமும் அப்படித்தான். கரோனாவை வெல்வோம். அதுவரை ஒழுக்கமான, நேர்மையான குடிமக்களாக இருப்போம். அரசாங்கம் செய்யச் சொன்னதைச் செய்வோம். அவ்வளவே”.

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மூன்று மொழிகளிலும் தான் பாடியுள்ள கரோனா விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்டுள்ளார். இதனை அந்தந்த மொழி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழில் வைரமுத்து எழுதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள விழிப்புணர்வுப் பாடல்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE