இளையராஜாவின் பாடலைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வைரலாகும் கீரவாணியின் வீடியோ

இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கீரவாணி பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 753 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கீரவாணி என்கிற மரகதவாணி தனது ட்விட்டர் பதிவில் சிறுவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இனிப்புகள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொன்னார்கள். அதனால் நான் இனிப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். அதற்குப் பதிலாக இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் அதிலிருக்கும் இனிமை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்''.

இவ்வாறு கீரவாணி தெரிவித்தார். அத்துடன் தேனே தென்பாண்டி மீனே பாடலைப் பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் இசைக்குப் புகழாரம் சூட்டும் வகையில் பேசியிருக்கும் கீரவாணியின் இந்த வீடியோ பதிவு இளையராஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 'பாகுபலி' படத்தில் கீரவாணியின் இசைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் கீரவாணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE