கரோனாவிலிருந்து மீளும் சீனா: மீண்டும் வெளியாகும்  அவதார், அவெஞ்சர்ஸ்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் சீனா தனது உள்ளூர் திரைத்துறையைப் புனரமைக்கும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

கரோனா தொற்று சீனாவிலிருந்து ஆரம்பித்து தற்போது உலகம் முழுக்க பரவி பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தத் தொற்றிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக மீண்டிருக்கும் சீனா, கடந்த சில வாரங்களாக முடக்கத்திலிருந்த தங்கள் நாட்டின் தொழில் துறைகளை மீண்டும் கட்டமைக்கும் பணிகளை முடுக்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்க, மார்வலின் நான்கு அவெஞ்சர்ஸ் பாகங்கள், அவதார், இன்செப்ஷன் உள்ளிட்ட திரைப்படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளது. இன்னும் இந்தத் திரைப்படங்களின் வெளியீடு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்தப் படங்களின் டிஜிட்டல் பிரதிகள் கிடைத்தவுடன் தேதி வெளியாகும் என்று சீனாவின் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவதார், அவெஞ்சர்ஸ் படங்களோடு சேர்த்து இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் மேலும் சீனாவின் பிரபலமான உள்நாட்டுத் தயாரிப்புத் திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.

அப்போது வெளியான சமயத்தில் அவதார் 202 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இன்செப்ஷன் 68.5 மில்லியன் டாலர்கள், இன்டர்ஸ்டெல்லர் 122 மில்லியன் டாலர்கள், அவெஞ்சர்ஸின் நான்கு திரைப்படங்கள் மொத்தமாகச் சேர்த்து 1.3 பில்லியன் டாலர்கள் என சீனாவில் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படியான பிரபலமான படங்கள் சீனாவில் மறு வெளீயிடு செய்யப்படும்போது அவையும் பெரிய அளவில் வசூல் செய்துள்ளது நினைவுகூரத்தக்கது. 2012-ஆம் ஆண்டு டைட்டானிக் படத்தின் 3டி பதிப்பு வெளியீடு 145 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

இதையெல்லாம் விட, இப்படி மறு வெளியீடு செய்யப்படும்போது, அவதார் வசூல் (2.744 பில்லியன் டாலர்கள்), அவெஞ்சர்ஸ் வசூலை (2.798 பில்லியன் டாலர்கள்) மிஞ்சி மீண்டும் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை மீட்டெடுக்குமா என்று வர்த்தக நிபுணர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE