கரோனா வைரஸ் பாதிப்பு: பிரபல நடிகர் மார்க் ப்ளம் மரணம்

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். அவருக்கு வயது 69.

1970 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் மார்க் ப்ளம் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை திரை நடிகர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

1985 ஆம் ஆண்டு வெளியான ‘டெஸ்பரேட்லி சீக்கிங் சூஸன்’படத்தில் மார்க் ப்ளம்மின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘க்ரொகடைல் டண்டீ’, ‘லவ்சிக்’, ‘ஜஸ்ட் பிட்வீன் ஃப்ரண்ட்ஸ்’, ‘ப்ளைண்ட் டேட்’ , ‘தி ப்ரெசிடியோ’ ஆகிய படங்களும் மார்க் பளம் நடிப்பில் குறிப்பிடத்தக்க படங்களாகும்.

நெட்ஃபிளிக்ஸ் தொடரான ‘யூ’ மற்றும் ‘மொஸார்ட் இன் தி ஜங்கிள்’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் சிறப்பான நடிப்பை மார்க் பளம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்க் ப்ளம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை திரை நடிகர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரான ரெபக்கா டேமன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘எங்கள் நண்பரும், முன்னாள் உறுப்பினருமான மார்க் ப்ளம் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை மிகவும் வருத்தத்துடன் பகிர்கிறேன்’ என்று ரெபக்கா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE