ரசிகர்களின் தொடர் விமர்சனம்: இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கிய கனிகா கபூர்

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கலந்து கொண்டனர். பின்னர் கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வசுந்தரா ராஜேவும் அவரது மகன் துஷ்யந்தும் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்தனர்.

தான் வெளிநாடு சென்று வந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்த கனிகா கபூரை இணையத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். அவரைக் கைது செய்யவேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் வலுத்த நிலையில் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

லக்னோ மருத்துவமனையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்பில் இருந்த 260 பேரை போலீஸார் தொடர்புகொண்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி கனிகா கபூர் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்ததால் தற்போது அந்தப் பதிவை அவர் நீக்கி விட்டார்.

அந்தப் பதிவில் கனிகா கபூர் கூறியிருந்ததாவது:

''கடந்த 4 நாட்களாக எனக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்து வந்தன. பரிசோதனையில் எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நானும் என் குடும்பமும் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி வருகிறோம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில் உங்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்களே உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புள்ள குடிமக்களாக நாம் நடந்து கொள்ளவேண்டும். ஜெய்ஹிந்த்''.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்,

இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தரப்பில் இருந்து குவிந்த வண்ணம் இருந்தன. இதனாலேயே கனிகா கபூர் இந்தப் பதிவை ஒருவாரம் கழித்து நீக்கியிருக்கக்கூடும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE