கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் மே மற்றும் ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடு, அரசியல் நிகழ்ச்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வட அமெரிக்காவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''என்னுடைய இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் சேர்ப்பதை விட முக்கியமான விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை. துரதிர்ஷ்டவசமாக , இது நாம் நம் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வேண்டிய தருணம். எனவே உங்கள், என் ரசிகர்கள், என் குடும்பம் மற்றும் என் இசைக்குழுவினர் ஆகியோரது நலன் கருதி மே மற்றும் ஜூன் வட அமெரிக்கச் சுற்றுலாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த தருணத்தில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்துடன் இசையைப் பகிர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக உங்களிடம் அது குறித்து தெரிவிப்பேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்''.

இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE