‘என் நாட்டைப் பற்றி கேலி செய்தால்?’ - ரசிகர்களை எச்சரித்த ரிஷி கபூர் 

ட்விட்டரில் தன்னைப் பின் தொடர்பவர்களுக்கு பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-த் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டின் மூத்த நடிகர் ரிஷி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், வேறு வழியே இல்லை'' என்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர்கள் சிலர், ''மதுபானங்களை வாங்கி வீட்டில் வைத்து விட்டீர்களா?'' என்று கேட்டிருந்தனர். இதனால் கடும் கோபமடைந்த ரிஷி, தனது மற்றொரு பதிவில் தன்னைப் பின் தொடர்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ''என் நாட்டைப் பற்றியோ என் வாழ்க்கை முறை பற்றியோ யாராவது கேலி செய்தால் அந்தப் பின்னூட்டங்கள் அழிக்கப்படும். எச்சரிக்கையாக இருங்கள். இது மிகவும் சீரியஸான விஷயம். இந்த சூழலைக் கடக்க உதவுங்கள்'' என்று ரிஷி கபூர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE