கரோனா வைரஸ் எதிரொலி- ‘வொண்டர் வுமன்: 1984’ ரிலீஸ் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

‘வொண்டர் வுமன்: 1984’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் 68,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

கரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஹாலிவுட் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய படங்கள் முதல் சிறிய படங்கள் வரை அனைத்தும் வெளியாகாமல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஹாலிவுட் ரசிகர்கள் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்த ‘வொண்டர் வுமன்: 1984’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியாகவிருந்தது.

இது குறித்து ‘வொண்டர் வுமன்: 1984’ படத்தின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

‘வொண்டர் வுமன்: 1984’ திரைப்படத்தை நாங்கள் பெரிய திரைக்காக நாங்கள் உருவாக்கினோம். சினிமாவின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இந்த மோசமான தருணங்களில், நம்மைப் போலவே தியேட்டர் அதிபர்களும் சிரமப்படும் வேளையில், எங்கள் படத்தை வரும் ஆக்ஸ்ட் 14ஆம் தேதி ஒத்திவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நல்ல தருணங்களுக்காக பிரார்த்தனை செய்வோம்’

இவ்வாறு பேட்டி ஜென்கின்ஸ் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலாம் ஏற்கெனவே ‘ஜேம்ஸ் பாண்ட்: நோ டைம் டு டை’, ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ உள்ளிட்ட பல படங்களின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE