21 நாட்கள் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

21 நாட்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், "அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவருக்கும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

மாளவிகா மோகனன்: என்னுடைய பெற்றோர், சகோதரர், என் அன்புக்குரியோர், நெருக்கமானோரது உடல்நலமே என் வாழ்க்கையில் மிக முக்கியம். பொறுப்பில்லாமல் நாம் நடப்பது அவர்களை வைரஸ் தாக்கக்கூடிய ஆபத்தில் தள்ளிவிடும்.

ரத்னகுமார்: கரோனா 1 லட்சம் பேரைப் பாதிக்க 67 நாட்கள் எடுத்துக்கொண்டது. அடுத்த 1 லட்சம் பேரைப் பாதிக்க 11 நாட்களே ஆனது. அடுத்த 1 லட்சம் பேருக்கு 4 நாட்களே ஆனது. இதுதான் இதன் வேகம். கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் வீட தான் உங்களைக் காப்பாற்றும் உயிர் காக்கும் படகு. வீட்டிலேயே இருங்கள்.

ராதிகா: நமது நன்மைக்காக 3 வாரங்கள் பூட்டு. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். இது உங்கள் நன்மைக்காகவும், உங்கள் குடும்பம் மற்றும் அன்பானவர்களின் பாதுகாப்புக்காகவும்தான். இந்தப் போரில் சண்டையிடுவோம் வாருங்கள்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின்: 3 வாரங்கள். வீட்டுக்குள்ளேயே இருப்போம் இந்தியர்களே. அடுத்த 3 வாரங்களில் நம் சமூகம் பொறுப்பற்று நடந்துகொண்டால் அதன் பாதிப்பு 20 வருடங்கள் இருக்கும் என்பதை நான் மீண்டும் சொல்கிறேன். நல்ல திட்டம் நரேந்திர மோடி அவர்களே. புலம்பி, நமது கருத்துகளைச் சொல்வதை விட்டுவிட்டுச் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.

தமன்னா: நமது பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் தேசிய அளவில் ஊரடங்கு அறிவித்துள்ளார். கரோனாவை எதிர்க்கச் சிறந்த வழி. நமது உயிர்களை விட வேறெதுவும் முக்கியமல்ல. நானும் என் குடும்பத்தினரும் வீட்டிலேயே இருக்கிறோம். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சாந்தனு: 67 நாட்களில் 1 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்த 11 நாளில் 2 லட்சம், அடுத்த 4 நாட்களில் 3 லட்சம் பேர். கரோனாவைத் தடுக்க நமது பிரதமரின் அற்புதமான திட்டம் இது. இதுதான் நமக்குக் கிடைக்கும் ஒரே வழி. கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளத் தீவிரமான ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது.

கவுதம் கம்பீர்: எனது தேசத்துக்காக நான் என்ன செய்வது என்று கேட்ட எல்லாருக்கும், உங்கள் விஸ்வாசத்தைக் காட்ட இதுதான் நேரம். நமது பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைக் கேளுங்கள். வீட்டிலேயே இருங்கள். இந்த 21 நாட்களை நாம் பாதிப்பின்றி கடந்தால், வெற்றி நமதே.

தாப்ஸி: 21 நாட்கள். உயிர் வாழ இது ஒன்றும் அதிக விலை அல்ல. இதை நாம் அனைவரும் பின்பற்றுவோம். கண்டிப்பாக இது முடியும்போது நாம் கொண்டாடக் காரணமும் நேரமும் கிடைக்கும். அதுவரை, ஒவ்வொரு நாளாக பொறுமையுடன் கடப்போம்.

ஹர்பஜன் சிங்: நமது வாழ்நாளில் இந்த 21 நாட்களில் மிக முக்கியமான நாட்களாக இருக்கும். தனி நபராகவும் சரி, ஒரு தேசமாகவும் சரி. அதனால் தயவுசெய்து பொறுப்புள்ள குடிமக்களாக, மகன்களாக, மகள்களாக, அப்பாக்களாக, கணவன்களாக, மனைவிகளாக, சகோதர சகோதரிகளாக இருப்போம். கரோனாவைத் தடுக்க நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு.

மகேஷ் பட்: நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு திருப்புமுனையில் உள்ளோம். இங்கு நாம் நின்று, நிதானித்து, அரசு சொல்வதைக் கேட்டு, 21 நாள் இந்திய ஊரடங்கை அமல்படுத்த உதவ வேண்டும். அதிக அச்சம் இருக்கும் சூழலில் ஒற்றுமையும், மனிதமும், தியாகமும், நம்பிக்கையும் தேவை. தேவையில்லாத புரளிகளைப் பேசுவதோ, கதறலோ அல்ல.

சேரன்: வரவேற்போம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை... இதை நாம் முழுமையாகப் பின்பற்றவில்லையென்றால் இத்தாலி நிலைமைதான் நமக்கும். இத்தாலி மக்கள் படும் அவஸ்தையை கண்முன் கண்டும் நாம் அலட்சியமாக இருந்தால் விளைவு விபரீதம்தான். தனித்திருத்தல்.. SOCIAL DISTANCING.. ஒன்றே வழியும் தீர்வும்...

ஐஸ்வர்யா ராஜேஷ்: 21 நாட்கள் பூட்டு. நமது தேசம் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்புக்காகப் பொறுப்போடு இருப்போம்.

சரத்குமார்: ஒட்டுமொத்த ஊரடங்குக்குக் கீழ்ப்படிய, நம் ஒற்றுமையைக் காட்ட நேரம் இது. சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை, அரசாங்க ஊழியர்களின் அயராத பணிகளை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு நமது ஆதரவும், பிரார்த்தனைகளும் தேவை. அவர்களுக்கு நாமும் சுமை கூட்ட வேண்டாம். வீட்டிலேயே இருப்போம்.

எஸ்.ஆர்.பிரபு: ஜெய் ஜக்கம்மா! மருந்து கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நடுராத்திரி 12 மணிக்குக் கூட சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம். அதுவரைக்கும் அந்த கோட்ட தாண்டி வந்துராத, வந்தா செத்துருவ!

தனஞ்ஜெயன்: வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள். வெளியே சென்று கரோனா தொற்றைப் பெறுபவராக இல்லாமல் நமது தேசத்துக்காகப் பங்களிக்கும் நேரம் இது. வீட்டிலேயே இருங்கள், புதிதாக எதாவது கற்றுக்கொள்ளுங்கள், நல்ல பழக்கங்களை ஆரம்பியுங்கள், உங்களுக்குப் பிடித்தவர்களை அழையுங்கள், குடும்பத்துடன் நெருக்கமாக இருங்கள், பார்த்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

அரவிந்த்சாமி: 21 நாள் பூட்டு. நம்மால் முடியும் இந்தியா. செய்வோம். உலகம் பின்பற்ற ஒரு முன்மாதிரியாக இருப்போம் வாருங்கள்.

வரலட்சுமி: நமக்கான தேர்வு செய்யப்பட்டு விட்டது. 21 நாள் பூட்டு. உங்கள் குடும்பங்களுடன் நல்ல நேரத்தைச் செலவிட, புதிய திறன்களைக் கற்க, புதிய சமையல் குறிப்பைச் செய்து பார்க்க, நண்பர்களுடன் இணையத்தில் விளையாட, எது வேண்டுமோ செய்யுங்கள். ஆனால் வீட்டிலேயே இருங்கள். முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். பாதுகாப்புடன் இருங்கள். இதை இன்னும் மோசமாக்க வேண்டாம்.

ஸ்ரேயா கோஷல்: நரேந்திர மோடி தனது உரையில் கரோனா கிருமி பாதிப்புக்காக 21 நாள் ஊரடங்கை அறிவித்துள்ளார். நம்மால் முடியும் இந்தியா. இந்த முயற்சியில் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் துணை நிற்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE