உங்களுக்கு அறிவில்லையா? - ஊரடங்கைப் பின்பற்றாமல் சாலையில் திரிபவர்களைச் சாடிய அக்‌ஷய் குமார் 

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் குறித்த எந்தவித விழிப்புணர்வுமின்றி சாலையில் திரிபவர்களை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொட்டுவிட்டது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இதுவரை 500க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். இதுவரை 10 பேர் இந்த வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கரோனா வைரஸ் பரவல் குறித்த எந்தவித விழிப்புணர்வுமின்றி சாலையில் திரிபவர்களைக் கடுமையாகச் சாடி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:

''உங்களுக்கு அறிவில்லையா? ஊரடங்கு என்பதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா? துணிச்சலான போர் வீரனைப் போல தெருவில் இறங்கி நடக்கவேண்டாம். நீங்களும் உங்கள் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் துணிச்சல் எல்லாம் காணாமல் போய்விடும். யாருமே உயிரோடு இருக்க முடியாது.

என்னுடைய படங்களில் நான் உயரமான கட்டிடங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் தொங்கியிருக்கிறேன். இன்றைக்கு நம் அனைவரது வாழ்க்கையும் அப்படித்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது எளிதாகக் கடந்து போக வேண்டிய விஷயமல்ல. இது விளையாட்டல்ல. வீட்டை விட்டு வெளியேறாமல் உங்கள் குடும்பத்துக்கு ஒரு ஹீரோவாக இருங்கள். அரசாங்கள் சொல்லும் வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

வீட்டுக்குள்ளேயே இருப்பதன் மூலம்தான் வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நாம் ஜெயிக்க முடியும். முட்டாளாக இல்லாமல், இந்தப் போரில் ஒரு கில்லாடியாக செயல்படுங்கள்''.

இவ்வாறு அக்‌ஷய் குமார் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE