‘வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டேன்’ - பிரபல அமெரிக்கப் பாடகருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி

பிரபல அமெரிக்கப் பாடகருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் பிரபல அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான ஆரோன் ட்வீட்தான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''ஹாய் நண்பர்களே. எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

அதிர்ஷ்டவசமாக எனக்கு மிகவும் லேசான அறிகுறிகளே தென்பட்டன. காய்ச்சல் இல்லை. ஆனால் சளி இருக்கிறது. ஆனால், பலருக்கு மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதாக அறிகிறேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டதாக உணர்கிறேன்.

கடந்த திங்கள்கிழமை பரிசோதனை முடிவுகள் வந்தன. இந்த சூழலை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள இருக்கிறேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானால் தாக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு ஆரோன் ட்வீட் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோ தற்போது முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE