உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்: சாந்தனு காட்டம்

உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று சாந்தனு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகள் அனைத்துமே கரோனா வைரஸ் தொற்றால் அதிக அச்சத்தில் உள்ளன. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, இன்று (மார்ச் 24) மாலை 6 முதல் 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இதனை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் எனக் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் கடுமையாகத் திட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் நேற்று (மார்ச் 23) மாலை கோயம்பேடு நிலவரம் குறித்த வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்களே வைரஸ் உங்களுக்குப் பரவாது என்ற நினைப்பில் வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து அனைவருக்கும் சொல்லுங்கள். பீடா கடைகள் மற்றும் பானி பூரி கடைகளின் கூட்டம் கூடுவதைப் பற்றி இன்னும் கேள்விப்படுகிறேன். இன்று மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் உங்களைப் பின்னியெடுத்து விடுவார்கள்.

நீங்கள் உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தினக்கூலி பணியாளர்கள், படிப்பறிவில்லாதவர்கள் இப்படி நடந்துகொண்டால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்னும் எண்ணற்ற படித்தவர்கள் இன்னமும் சாலைகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள். வீட்டுக்குள் இருங்கள்”.

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE