வீட்டில் இருக்கும் தருணத்தில் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்: ராணா டகுபதி

வீட்டில் இருக்கும் இதுபோன்ற தருணத்தில் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 ஆகவும், பலி எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 144 தடை அமலபடுத்தப்பட்டு மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்கானித்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறையில் இருக்கும் குழந்தைகளைக் கவர ஆன்லைன் கதை புத்தக விற்பனை தளமான ‘அமர் சித்ர கதா’ ஏராளமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமர் சித்ர கதா தளத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் ராணா டகுபதி கூறியிருப்பதாவது:

''இன்றைய சூழலில் வீட்டைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே சிறந்தது. ஆனால், பிரச்சினை என்னவென்றால் இன்றைய தலைமுறை பல்வேறு விஷயத்தில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அமர்சித்ர கதா தளத்தில் இந்த மாதம் ஆன்லைன் சந்தாவை இலவசமாகத் தருகிறோம். அதன் மூலம் அவர்கள் பல கதைகளைப் படிக்க முடியும். அவை நம் நிலத்தின் கதைகள். வாசித்தல் மிகவும் பிரபலமாக இருந்தபோது நாம் நம் நாட்டைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்து கொண்டோம். எதிர்காலத்தைக் கட்டமைக்க கடந்த காலத்தைப் பற்றி இளம் தலைமுறையினர் படிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இதுபோன்ற தருணத்தில் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

இந்த சூழலை நாம் இப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்கிறோம். எப்போதும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருப்பது மிகவும் முக்கியம். அமைதியாவும் பயமில்லாமலும் இந்த தருணத்தை அனுபவிக்க வேண்டும்''.

இவ்வாறு ராணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE