கரோனா பாதிப்பு எதிரொலி: அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள்

கரோனா பாதிப்பு எதிரொலியால் நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள் அதிகரித்திருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா கிருமித் தொற்று காரணமாக, சர்வதேச அளவில் பல்வேறு நகரங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இதனால் பெரும்பாலான உலக நாடுகளில் திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதனால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,.

இது தொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெட் சாரண்டாஸ், "எங்கள் தயாரிப்புகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நாங்கள் தயாரித்து வரும் அனைத்துத் திரைப்படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. வரலாறில் இதுவரை யாரும் பார்த்திராத ஒன்று இது.

(அதே நேரத்தில்) நெட்ஃபிளிக்ஸ், தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எங்களுடைய நெட்ஃபிளிக்ஸ் அமைப்பு வலுவானது என்பதால் எவ்வளவு பேர் பார்த்தாலும் அதைக் கையாள முடியும். நிறைய பேர் நெட்ஃபிளிக்ஸ் பார்த்து வருகின்றனர்.

எங்கள் வெப் தொடர்களின் அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் பதிவேற்ற உழைத்துக் கொண்டிருப்பதால் அடுத்த சில மாதங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. இப்போது தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு வேளை இந்த வருடத்தின் பிற்பகுதியில் (இதே நிலை தொடர்ந்தால்) பிரச்சினையைச் சந்திக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்புகளின் முன்னேற்பாடு வேலைகள் தடையின்றி நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அவர்கள் தயாரிக்கவுள்ள 'பிக் மவுத்' என்ற தொடரின் திரைக்கதையை, தொடரில் நடிக்கவுள்ள 40 நடிகர்களும் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வீடியோ சாட் மூலமாகப் படித்து ஒத்திகை பார்த்துள்ளனர்.

கடந்த வாரம், ஐரோப்பா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் செயலியின் பதிவிறக்கம் பிப்ரவரி மாதத்தை விட கிட்டத்தட்ட 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE