முற்றிலுமாக குணமடைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகை

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஓல்கா குரிலென்கோ தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’, டாம் க்ரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஓல்கா குரிலென்கோ என்ற நடிகை தனக்கு கோவிட் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த ஓல்கா குரிலென்கோ தற்போது தான் முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது:

''நான் முற்றிலுமாக குணமடைந்து விட்டேன். ஒருவார காலமாக நான் மிகவும் உடல்நலம் குன்றி இருந்தேன். பெரும்பாலும் படுக்கையிலும், தூங்கிக் கொண்டும் இருந்தேன். கடும் காய்ச்சலும் தலைவலியும் இருந்தது. இரண்டாம் வாரம் காய்ச்சல் போய்விட்டது. ஆனால் லேசான இருமல் இருந்தது. நான் மிகவும் சோர்வாக இருந்தேன். அந்த வாரத்தின் இறுதியில் நான் சரியாகி விட்டேன். இருமல் முற்றிலுமாக போய்விட்டது. நான் நன்றாக இருக்கிறேன். இப்போது நான் என் மகனுடன் நேரத்தைச் செலவழித்து வருகிறேன்''.

இவ்வாறு நடிகை ஓல்கா குரிலென்கோ கூறியுள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா ஹாங்க்ஸ் இருவரும் தற்போது குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE