போய் வா நண்பா ! அடுத்த பிறவியில் சந்திப்போம்: விசுவின் மறைவுக்கு சிவகுமார் உருக்கம்

By செய்திப்பிரிவு

போய் வா நண்பா ! அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று விசுவின் மறைவு குறித்து சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மாலை நடைபெறவுள்ளது. விசுவின் மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசுவின் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அன்பு விசு! டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்துக் காட்டியவர் நீங்கள்.

’சம்சாரம் அது மின்சாரம்’- ‘மணல் கயிறு’- இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள. ‘அரட்டை அரங்கம்’- அகில உலகப் புகழை உங்களுக்குச் சேர்த்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்துப் பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்.

மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாகப் படைப்புக்களில் வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழ்க்கையிலும் ஆரோக்கியத்துக்காகக் கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள். இறைவன் விதித்த மானுட வாழ்வைக் கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்.

மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தே ஆகவேண்டும். உங்களுக்குக் கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம், ரயில் பயணம், விமானப்பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டுக் கிடக்க 144 தடை உத்தரவு வேறு. என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள். அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன்.

பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்குப் பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய். போய் வா நண்பா ! அடுத்த பிறவியில் சந்திப்போம்”

இவ்வாறு சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்