கரோனா வைரஸ் அச்சுறுத்தல் - வைரலாகும் ஷாருக் கானின் விழிப்புணர்வு வீடியோ

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 7 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் கீழ் ‘இன்ஷா அல்லாஹ், கரோனா வைரஸ் பரவலை எதிர்க்க மக்கள் ஊரடங்கு உதவும். இதை நாம் மறுபடியும் செய்யும் நிலை ஏற்படலாம். கைதட்டுதல் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. உயிரை காப்பவர்களை உற்சாகப்படுத்துவோம். நல்ல நோக்கத்தோடு இதை செய்வோம். ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நன்றி’ என்று ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் தனது படங்களான ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ‘கல் ஹோ நா ஹோ’ ஆகிய பல படங்களின் காட்சிகளை கோர்த்து, கரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், அதீத சோர்வு, தொண்டை வலி ஆகியவற்றை பற்றியும் அவற்றை உணர்பவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE