விசுவின் நினைவுகள் வீடியோ; கருப்பு உடையணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி: சரத்குமார் யோசனை

By செய்திப்பிரிவு

விசுவின் நினைவுகள் குறித்து வீடியோ வெளியிட்டும், கருப்பு உடையணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தலாம் என்று சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், கரோனா முன்னெச்சரிக்கையால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதற்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”விசு ஒரு யதார்த்தவாதி. தன் படங்களில் அவரது சமூக சிந்தனைகள் பரந்திருக்கும். சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கு தன் குரலைத் தவறாமல் பதிவு செய்தவர். கடைசியாகக் குடியுரிமை திருத்தச் சட்டம் முதல் கதை திருட்டு வரை தன் கருத்தைப் பேசி வீடியோவாக வெளியிட்டவர்.

அவர் இருந்திருந்தால் வாசலுக்கு வந்து கரகோஷம் எழுப்பி கொரோனாவுக்கும் தனிமைப்படுத்தலை அழுத்திச் சொல்லியிருப்பார். அவருக்கு நாம் எப்படி அஞ்சலி செலுத்தப் போகிறோம்? என்னுள் எழுந்த யோசனையை விசுவோடு பழகிய தருணங்களை அசைபோட்டு எழுதுகிறேன் இது என் முடிவல்ல, யோசனைதான். திரைத்துறையினர் விசுவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடப்போகிறோமா? நம்மைப் பார்க்க வரும் கூட்டத்துக்கும் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலையும் மீறி வழி விடப் போகிறோமா?

துக்கத்தை வெளிப்படுத்தக் கருப்பு உடையணிந்து விசுவின் நினைவுகளைப் பேசி வீடியோவாக வெளியிடலாம். அவரது இறுதி ஊர்வலம் துவங்கும் போது மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தலாம். விசு இருந்து இப்படி ஒரு சூழல் யாருக்கு நேர்ந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தனிமையைத் தொடர்வோம். அதன் வழி விசுவுக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவரவர் வீட்டு வாசலில் கருப்பு உடையுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம்”

இவ்வாறு சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE