பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு சிறையில் கரோனா வைரஸ்- அதிகாரிகள் உறுதி

பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தி ஆர்டிஸ்ட்', 'தி இமிடேஷன் கேம்', 'ஜாங்கோ அன்செயிண்ட்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனியின் துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்பட்டது.

நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ, உமா துர்மேன் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நடிகைகள் ஹார்வீயால் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகக் குற்றம் சாட்டி வந்தனர்.

ஹார்வீ வைன்ஸ்டீனுக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்தவர் நடிகை ரோஸ் மெகாவென். அவருக்கு ஆதரவாக, அவரது தோழியும் நடிகையுமான அலிஸா மிலானோ 2017-ம் ஆண்டு ‘மீ டூ’ எனும் ஹேஷ்டேகை உருவாக்கினார். அது பின்னாட்களில் ஓர் இணைய இயக்கமாக உருவெடுத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பிறகு, மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இருந்த நியூ யார்க் சிறையில் போதிய வசதிகள் இல்லாததால் அவர் வெண்டி சீர்திருத்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த சில அதிகாரிகளும் தனிமைப்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE