கரோனா முன்னெச்சரிக்கை; வீட்டு முதலாளிகள் வாடகையை ரத்து செய்ய வேண்டும்: நீரவ் ஷா 

கரோனா முன்னெச்சரிக்கையால் மக்கள் வீடுகளிலேயே இருப்பதால், வீட்டின் முதலாளிகள் வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்று நீரவ் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 387 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் இயக்கம் நிறுத்தம், 75 மாவட்டங்கள் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனை அறிவுறுத்தி பல்வேறு திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக நீரவ் ஷா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

"நம்முடைய நினைவாற்றலுக்கு சமூகத்திடமிருந்து விலகியிருத்தலே நல்லது. யாருடைய மரணத்துக்கும் நாம் காரணமாகி விடக்கூடாது. அடுத்த 14 நாட்களுக்கு நாம் அனைத்தையும் முடக்க வேண்டும். அதன்பிறகு, அனைத்தும் சரியாகும் வரை எல்லைகளை மூட வேண்டும். இதைத் தவிர வேறு வழி இல்லை.

அவசியமான சேவைகள் தவிர அனைத்து வகையான போக்குவரத்தும் முடக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் வெகு தூரம் பயணம் செய்யக்கூடாது. அனைத்து வீட்டு முதலாளிகளும் இந்த பிரச்சனை முடியும் வரை வாடகையை ரத்து செய்ய வேண்டும். சம்பளம் இல்லையென்றால் மக்களால் எப்படி வாடகை செலுத்த முடியும்"

இவ்வாறு நீரவ் ஷா தெரிவித்துள்ளார்

இதில் போக்குவரத்து முடக்கம் மற்றும் வீட்டு வாடகை தொடர்பான இரண்டு ட்வீட்களிலும் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE