மருத்துவர்களை கவுரவப்படுத்த பிரத்யோக இசை; கேட்டவுடன் போட்டுக்கொடுத்த இளையராஜா: கவுதம் மேனன் நெகிழ்ச்சி

கரோனா நோய்த்தடுப்புப் பணியில் பாடுபடும் மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, இளையராஜாவிடம் பிரத்தியேக இசையமைப்பைக் கேட்ட உடனே போட்டு தந்ததாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கவுதம் மேனன்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இது தொடர்பான வேண்டுகோள் விடுக்கும் போது, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 5 நிமிடம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கை தட்டி, மணியோசை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.

அதன்படி இன்று (மார்ச் 22) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி தொடங்கி அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என அனைவருமே வீட்டின் வாசலில் கைதட்டி தங்களுடைய மரியாதையை வெளிப்படுத்தினார்கள். இந்த தருணத்தில் இயக்குநர் கவுதம் மேனன் தனது ஒன்றாக யூ-டியூப் பக்கத்தில் 1 நிமிடம் 25 விநாடிகள் கொண்ட இசைக் கோர்வை ஒன்றை வெளியிட்டார். அதை 'இளையராஜா சாரிமிடமிருந்து' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதன் பின்னணி குறித்து கவுதம் மேனனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "மாலை 5 மணிக்கு மருத்துவர்களை கவுரவப்படுத்தும், மரியாதை செய்யும் நல்ல விஷயத்தை, ஏதாவது வித்தியாசமாகப் பண்ணலாம் என்று எண்ணினேன். இளையராஜா சாரிடம் கேட்கலாம் என்று இன்று காலையில் தான் சாருக்கு குறுந்தகவல் அனுப்பினேன்.

தாராளமாகப் பண்ணலாம் என்று உடனே ஒப்புக் கொண்டு செய்து கொடுத்தார். எங்கள் ஏரியாவில் மாலை 5 மணியளவில் இந்த இசையை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, அதைப் போலவே கைதட்டி எங்களுடைய மரியாதையை மருத்துவர்களுக்குத் தெரிவித்தோம்" என்று தெரிவித்தார் கவுதம் மேனன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE