நதி மாதிரி தான் நம் வாழ்க்கையும்: 'மாஸ்டர்' விழாவில் விஜய் பேச்சு

By செய்திப்பிரிவு

நதி மாதிரி தான் நம் வாழ்க்கையும், பேசாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் பேசியதாவது:

“'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் எனக்கும் உள்ளது. அதுக்கு முக்கியமான காரணம், போன விழாவில் அரங்கிற்கு வெளியே நடந்த விஷயங்கள் தான். இந்த விழாவுக்கே அரைமனதுடன் தான் ஒப்புக் கொண்டேன்.

இந்த விழாவின் நாயகன் அனிருத் தான். அனைத்து பாடல்கள் உருவாக்கத்துக்குப் பின்னாலும் ஒரு குட்டிஸ்டோரி இருக்கும். ஆனால், இதில் குட்டி ஸ்டோரியை பாடலாக உருவாக்கியுள்ளார். அனிருத்தும், அருண்ராஜா காமராஜும் சேர்ந்து என்னைச் செய்துவிட்டார்கள். படத்துக்குப் படம் ரொம்ப ஷார்ப்பாகிக் கொண்டே இருக்கிறார். வாழ்த்துகள் ராக் ஸ்டார்.

ஒரு நடிகனாக ஜெயித்தவுடன், அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது ரொம்பவே கஷ்டமான விஷயம். சின்ன சின்ன கேரக்டர்கள் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் நல்ல வில்லன் கேரக்டர். எனக்கு எதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஏனென்றால், அவருக்கென்று தனி வியாபாரம் இருக்கிறது. அதில் படங்கள் நடித்துப் போய்க் கொண்டே இருக்கலாம். ஒரு நாள் அவரிடமே 'ஏன்.. எதற்கு' என்று கேட்டேன். 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க' என்று நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போய்விட்டார். ரொம்ப நன்றி நண்பா.

மாளவிகா மோகனன் மட்டும் தமிழ் பேச கற்றுக் கொண்டார் என்றால், அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆண்டரியா இந்தக் கேரக்டர் ஒப்புக் கொண்டு நடித்ததிற்கு நன்றி. அவர் ரொம்பவே தேர்வு செய்து படங்கள் பண்ணுகிறார். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்புறம் என் நண்பர் ஜெகதீஷ். 7 வருடங்களுக்கு முன்பு அறிமுகமானவர். இன்றைக்கு இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் சார் காமெடியாக ஒரு விஷயம் சொல்வார். 'என்னிடம் டைம் கேட்டு உங்களை மீட் பண்ணினார். இப்போது நான் உங்களை மீட் பண்ண அவரிடம் டைம் கேட்க வேண்டியதுருக்கு' என்று சொல்வார். அது அவருடைய வளர்ச்சி. ரொம்ப சந்தோஷம்.

இந்தப் படத்தில் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைவான படங்கள் பணிபுரிந்தவர்கள் தான். ஆனால், பணி ரீதியாக ரொம்பவே அனுபவம் வாய்ந்தவர்களாகச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தருடைய பணியைப் பற்றி நான் தனித்தனியாகப் பேசுவதை விட, அவர்களுடைய பணியே பேச வைக்கும். அப்புறம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார். கைதி மூலம் திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். மாஸ்டர் படத்தில் என்ன பண்ணப் போகிறார் எனத் தெரியவில்லை. நானும் உங்களை மாதிரியே இறுதி வடிவத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

லோகேஷ் உண்மையில் எனக்கு ஒரு ஆச்சரியம் தான். வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்புறமாக 'மாநகரம்' படம். இடையே நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன குறும்படங்கள். பெரிதாக பணிபுரிந்த அனுபவம் எல்லாம் கிடையாது. ஆனால், அவரது முதல் படத்தைப் பார்த்தீர்கள் என்றால் அவ்வளவு குழப்பமான கதையைக் கூட ரொம்ப தெளிவாகச் சரியான பொருட்செலவில் எடுத்திருந்தார். எப்படி என்று கேட்டேன். குறும்படங்கள் பண்ணும் போது கேமரா டிபார்ட்மெண்ட் தொடங்கி டீ, காபி கொடுப்பது வரை நாங்களே அனைத்தையும் பண்ணுவோம். அப்போதே காட்சிகள் பிரிப்பது, வசனங்கள் என்ன எல்லாமே உள்ளுக்குள் வைத்திருப்பார். ப்ளான் ஏ மிஸ் ஆனால் ப்ளான் பி வைத்திருப்பார்.

முக்கியமாக, கையில் சீன் பேப்பரே இருக்காது. முதல் 2-3 நாட்கள் தெறித்துவிட்டேன். யார் கையிலும் சீன் பேப்பர் இல்லை. நீங்கள் வருகிறீர்கள், இந்த வசனம் பேசுகிறீர்கள் என்று சொல்வார்கள். 4-5 மாதம் என்னடா பண்ணப் போறோம் என்று யோசித்து. ‘நண்பா.. இந்த மாதிரி அந்த மாதிரி எந்த மாதிரியும் வேண்டாம். மொத்த டீமுக்குள் சீன் பேப்பர் கொடுத்துவிடுங்கள். நாம் பாலோ பண்ணிக் கொள்வோம்” என்றேன். அவருடன் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மற்றபடி என்னுடன் நடித்த சாந்தனு, ரம்யா, பேராசிரியர்களாக நடித்தவர்கள், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் நன்றி.

என்னுடைய படத்தில் 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதி போல ஓடிக்கொண்டு இரு' என்ற பாடல் இருக்கும். நதி போல ஓடிக் கொண்டு இரு என்பது தான் முக்கியம். கிட்டதட்ட அனைவரது வாழ்க்கையும் ஒரு நதி மாதிரி தான். சில இடங்களில் வணங்குவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல் எறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தாங்க, நம்ம வாழ்க்கையும். நம்ம வேலை, நம்ம கடமை செமயாக செய்துவிட்டு, அந்த நிதி மாதிரியே போய்க் கொண்டே இருக்க வேண்டும். Life is very short Nanba. Always be Happy. டிசைன் டிசைனா problems will come and go, கொஞ்சம் சில் பண்ணும் மாப்பி. அவ்வளவுதாங்க மேட்டர்”

இவ்வாறு விஜய் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE