திட்டமிட்டபடி வெளியாகுமா 'மாஸ்டர்'?

'மாஸ்டர்' படத்தை திட்டமிட்டபடி வெளியிடலாமா என்ற ஆலோசனை இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் நடைபெறவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியீட்டுக்காக இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித் குமார் கைப்பற்றி வெளியிடுகிறார்.

தற்போது உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த மாதம் இறுதிவரை திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரம் வெளியான படங்கள் எதற்குமே திரையரங்குகளுக்கு மக்கள் வரவில்லை. எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதால், திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர். தற்போது தமிழக அரசும் கேரளா எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை ஒத்துவைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏப்ரல் 9-ம் தேதி 'மாஸ்டர்' படத்தை வெளியிட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது படக்குழு. ஆனால், இந்த கரோனா அச்சத்தால் படத்தை திட்டமிட்டபடி வெளியிடலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்ற ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளது. 'மாஸ்டர்' இசை வெளியீடு விழா முடிந்தவுடன், இந்த ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.

வெளிநாடுகளில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், 'மாஸ்டர்' வெளியீடு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனென்றால், பலரும் பெரும் முதலீடு செய்திருப்பதால் ஏப்ரல் 9-ம் தேதி சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE