திரை விமர்சனம் - தாராள பிரபு

By செய்திப்பிரிவு

சென்னையில் கருத்தரிப்பு மையம் நடத்துபவர் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). குழந்தையின்மை பிரச்சினைக்காக பல தம்பதியர் அவரிடம் வருகின்றனர். ஆரோக்கியமான விந்தணு வழங்கும் கொடையாளர் கிடைக்காமல் தவிக்கும் அவர், இறுதியில் கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவை (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார். அவரை மெல்ல நெருங்கி, விந்து தானம் பற்றி எடுத்துக் கூறுகிறார். முதலில் தலைதெறிக்க ஓடும் பிரபு, பின்னர் சம்மதிக்கிறார். இதற்கி டையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுவுக்கு காதல் ஏற்படுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடக்கிறது. ஆனால், மனத்தடை காரண மாக, தான் விந்தணு கொடையாளர் என்பதை நிதியிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபு எதிர் கொள்ளும் ஒரு பிரச்சினை, அவரது வாழ்க் கையை புரட்டிப்போடுகிறது, அதில் இருந்து மீண்டாரா, இல்லையா என்பது கதை.

புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப முன்னேற்றம் என அறிவியல் வளர்ச்சி வேகமாக நடக்கும் காலம் இது. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்பதை சொல்லும் திரைக்கதை, செய்தி சொல்லும் பாங்குடன் பரபரக்கிறது. இந்த செய்தி சொல்லல் உத்தி, கதாபாத்திரங் களின் வசனம் வழியே நேரடியாகவும், அவர்கள் அடையும் மனமாற்றம் வழியாக வும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் பிரச்சாரம் இல்லாமல் சித்தரிப்பை கட்டுக்குள் வைத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.

கடந்த 2012-ல் வந்த ‘விக்கி டோனர்’ என்ற இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்துள்ள இயக்குநர், அதை தமிழுக்கு ஏற்ப தருவதில் வெற்றி பெறுகிறார். கொஞ்சம் பிசகினாலும் பார்வையாளர்கள் முகம்சுளிக்க வாய்ப்பு உள்ள கதையோட் டத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வாறு உணரமுடியாத வகையில் ஜாலம் நிகழ்த்துகிறது திரைக்கதை.

அதேநேரம், பழகிய பாதையிலேயே பயணிப்பதால் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகித்துவிடவும் திரைக்கதை வாய்ப்பு அளித்துவிடுகிறது.

திரைக்கதையின் மற்றொரு சிறப்பான அம்சம், விந்து தானம் என்ற ஒற்றை இழையுடன் நின்றுவிடாமல், மறுமணம், தத்தெடுப்பு ஆகிய மேலும் இரு முக்கிய இழைகளை தொடர்புபடுத்தி, இயல்பான கதையோட்டத்தில் அவற்றை சிறப்பாக குழைத்த விதம், உணர்ச்சிகரமான விருந் தாக நிறைவு தருகிறது. இருப்பினும் பல பார்வையாளர்களுக்கு பிரபு கதாபாத்திரம் அதிர்ச்சி, அபத்தமாகவும் தோன்றலாம்.

படத்தின் மிகப் பெரிய பலம் டாக்டர் கண்ணதாசனாக வரும் விவேக். நகைச் சுவை, நக்கலடிப்பது, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் மிகையின்றி நடிப்பது என திறமையை வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண் டுள்ளார்.

விந்துதானம் என்ற அறிவியல் வளர்ச்சியை மனிதகுல வளர்ச்சிக்கான கொடையாகப் பார்க்கும் நவீனத்துவ மனித ராக தன்னை முன்னிறுத்தும் கண்ணதாசன் கதாபாத்திரம், அதைப் பயன்படுத்தி, குழந்தை பெற்றுக்கொள்வது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற பெற்றோரின் ரகசியத்தை பகடையாகப் பயன்படுத்தி பல்வேறு காரியங்களை சாதித்துக்கொள் கிறது. நாயகனையும் தனது சுயநலத்துக் காகப் பயன்படுத்திக் கொள்கிறது. இத்த கைய இடங்களில் இடறும் கதாபாத்திர முரணில் சிக்கிக்கொள்கிறது. பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர், ஒரே ஒரு கொடையாளரை நம்பி செயல்படுவ தும், எப்போதும் ஹரிஷையே சுற்றிக்கொண் டிருப்பதும் நம்பும்படி இல்லை.

நாயகன் - நாயகி இருவரது குடும்ப உறுப்பினர்களின் குணநலன்களை முழுமை யாக சித்தரித்துள்ளார் இயக்குநர். இதன்மூலம், குடும்ப வாரிசுகளின் திரு மணம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் பயனாக கிடைக்கப்போகும் குடும்ப வாரிசின் அவசியத்தையும், அது தரப்போகும் உன்னத உணர்வு நிலையையும் அழுத்தமாக நிறுவியிருக் கிறார். நாயகனின் அம்மாவை சற்று பிற்போக்கானவராகவும், பாட்டியை நவீன சிந்தனை கொண்டவராகவும் காட்டி யிருப்பது சுவாரஸ்ய பார்வை.

ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்தாட்ட வீரராகவும், காதலும் திருமணமும் உருட்டி விளையாடும் ஒரு பாரம்பரியம் பேணும் குடும்பத்துப் பையனாகவும் பல பரிமாணங்களில் தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

நாயகனுக்கு இணையான கதா பாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார் கதாநாயகி தான்யா ஹோப். அழகான கதாநாயகிகளுக்கு நடிக்க வராது என்பதை உடைத்தெறிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.சிவாஜியின் நகைச்சுவையை கடைசிவரை ரசிக்கமுடிகிறது. உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என கேட்கும் இடம், நகைச்சுவையில் எழுதப்பட்ட ரகளையான திரைக்கதைத் திருப்பம்.

அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள் தந்திருக்கும் பாடல்கள், உணர்வுகளின் ஊர்வலமாக நகரும் படத்துக்கு மாபெரும் பலம்.

சாதி, மதம், வெட்டு குத்து, போதைப் பொருள் எனத் தொடரும் மண்டையிடிப் படங்களுக்கு நடுவே, மனித உறவுகளை முன்னிறுத்தி, அறிவியல் நவீனத்தின் சாதக அம்சங்களை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தந்திருக்கும் இந்த திரைப்படத்தை தாராள மாக வரவேற்கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்