'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா: அரசியல் பேசுவாரா விஜய்?

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில், விஜய் அரசியல் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' உள்ளிட்ட இசை வெளியீட்டு விழாக்களில் விஜய்யின் பேச்சு மிகவும் பிரபலம். இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் அரசியல் ரீதியாகச் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தது.

’மெர்சல்’ படத்தில் டிஜிட்டல் இந்தியாவை விமர்சித்ததிற்காக பாஜகவினரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார் விஜய். 'சர்கார்' படத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றைத் தீயில் தூக்கிப் போடும் காட்சிக்காக கடும் எதிர்ப்பு உருவானது. 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ. அங்கு உட்கார வைக்க வேண்டும்' என்று குட்டிக்கதையுடன் விஜய் பேச, அது அதிமுகவினரைக் கோபத்துக்கு உள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து 'பிகில்' இசை வெளியீட்டு விழா நடத்த எப்படி அனுமதித்தீர்கள் என்று கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. மேலும், விஜய்யைக் கடுமையாக விமர்சித்து அதிமுக அமைச்சர்கள் பேட்டியளித்தார்கள்.

'பிகில்' படம் பெரும் வரவேற்பைப் பெற்று, சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக 'மாஸ்டர்' படப்பிடிப்பிலிருந்து விஜய்யை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தற்போது இந்தச் சோதனை அனைத்தும் முடிந்து, விஜய் சரியாக வருமான வரி செலுத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்கள்.

வருமான வரித்துறை சோதனை சர்ச்சை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், நாளை (மார்ச் 15) மாலை 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. முந்தைய விஜய் படங்கள் போல் அல்லாமல், ரசிகர்கள் இல்லாமல் படக்குழுவினருடன் கூடிய விழாவாக வடிவமைத்துள்ளனர். ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

மேலும், விஜய் என்ன பேசுவார் என்று பலரும் ஊகங்களுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, "இந்த முறை வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சில விஷயங்களைப் பேசவுள்ளார். அதிலும் தன் தரப்பு நியாயங்களை மட்டுமே சொல்வார். இதனை ஒரு குட்டிக் கதை மூலமாக மறைமுகமாகப் பேசுவாரே தவிர, நேரடியாகச் சுட்டிக்காட்ட மாட்டார்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE