வைரஸ் பரவாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்: டாம் ஹாங்க்ஸ்

By செய்திப்பிரிவு

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தனது பதிவில் டாம் ஹாங்க்ஸ் கூறுகையில், ''எங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரம், பாதுகாப்புக்குத் தேவைப்படும் வரை பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, தனிமையில் இருப்போம். இனி அந்தந்த நாளுக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவுள்ளோம். இதைத் தாண்டி இதில் எதுவும் இல்லை. தொடர்ந்து நடக்கும் விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்'' என்றார்.

இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவி ரீடாவுடன் இருக்கும் செல்ஃபி ஒன்றை நேற்று பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், ''ஹலோ நண்பர்களே.. எங்களை இங்கு நல்ல முறையில் பராமரித்துக் கொள்ளும் அனைவருக்கும் நானும் ரீடாவும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதால், நாங்கள் அதை யாருக்கும் பரப்பிவிடாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அவ்வாறு பரவினால் அது மற்றவர்களுக்கு மிகத் தீவிரமான உடல்நலக் குறைவை ஏற்படுத்தக்கூடும். நாம் நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வதன் மூலமும், நிபுணர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமும் இதைக் கடந்து செல்ல முடியும். இல்லையா? தற்போது பல பிரச்சினைகள் இருப்பினும் எதற்கும் கவலைப்படக்கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE