கோவிட் -19 அச்சுறுத்தல்: ஒரு வருடம் தள்ளிப்போன ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜேம்ஸ் பாண்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ படத்தின் வெளியீட்டுத் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகளையும் தள்ளிவைத்து வருகின்றன.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ திரைப்படத்தின் வெளியீட்டை நவம்பர் மாதம் வரை தள்ளி வைப்பதாக எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அந்த வரிசையில் தற்போது யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அடுத்த படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ 9 ஆம் பாகத்தின் வெளியீட்டுத் தேதியை அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தற்போது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று யுனிவர்சல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஹாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE