அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது: விஷால் அணியினர் மீது ஐசரி கணேஷ் காட்டம்

அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது என்று விஷால் அணியினர் மீது ஐசரி கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருந்த நிலையில், அதற்குத் தடை உத்தரவு பெற்றுள்ளது விஷால் அணி. இதனிடையே ஐசரி கணேஷ் தலைமையிலான அணி இன்று (மார்ச் 11) காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பில் ஐசரி கணேஷ், இயக்குநர் பாக்யராஜ், உதயா, நடிகை சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் ஐசரி கணேஷ் பேசியதாவது:

”ஏழை நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மருத்துவ உதவித்தொகை போய்க் கொண்டிருக்கிறது. நடிகர் சங்கம் மூலமாக 450 பேருக்கும், நடிகர் சங்கம் கொடுக்கும் லிஸ்ட் மூலமாக நான் 150 பேருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நடிகர் சங்கத்திலிருந்து போகும் மருத்துவ உதவி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மருத்துவ உதவித்தொகையை நாங்கள் நிறுத்தி வைக்கவில்லை. அதைக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அந்த 450 பேருடைய முகவரி வேண்டும் எனக் கடிதம் கொடுத்தோம். அதற்கு நடிகர் சங்கத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, எங்களைச் சங்கத்துக்கு மட்டுமே நியமித்துள்ளனர். நடிகர் சங்க ட்ரஸ்ட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இருந்த அலுவலக பொறுப்பாளர்கள் இப்போது இல்லை. தேர்தல் அறிவித்தவுடனே, அலுவலகப் பொறுப்பாளர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் நடிகர் சங்க அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அவர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை.

இந்த 450 பேருடைய பாவம் அவர்களை எல்லாம் சும்மா விடாது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே லிஸ்ட்டைக் கொடுங்கள். நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்றோம். அதையும் பண்ணவில்லை. எங்கள் லிஸ்ட் கொடுத்தார்கள் என்றால், நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். பெரிய நடிகர்கள் யாரேனும் உதவ முன் வந்தால், அதையும் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். தயவுசெய்து அந்த 450 பேருடைய முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கத் தேர்தல் நடந்து யார் பொறுப்புக்கு வந்தாலும், அதுவரை இந்த உதவித்தொகை கொடுத்துக் கொண்டிருப்போம். அதற்குப் பிறகு சங்கம் பார்த்துக் கொள்ளும். மேல்முறையீடு வேண்டாம் என்று சொன்னோம். எதற்குமே நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவர்கள்தான் தேர்தலுக்குப் பயந்து போய் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். எங்களுக்குச் சீக்கிரம் அந்தக் கட்டிடம் வர வேண்டும் என நினைக்கிறோம்.

இப்போது தேர்தல் அறிவித்தவுடனே, மேல்முறையீட்டுக்குப் போகிறார்கள். அப்படியென்றால் அந்தக் கட்டிடம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன என்று நினைக்கிறார்கள். அது நல்ல எண்ணமில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும், நாங்கள் நீதிமன்றம் செல்லப் போவதில்லை. நடிகர் சங்கத்தில் பணமே இல்லை. கஜானாவைக் காலி பண்ணிவிட்டார்கள்”.

இவ்வாறு ஐசரி கணேஷ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE