சினிமாவில் நடிக்க அம்மாவின் நகைகளை அடகு வைத்தேன்: விஜய் டிவி ரக்‌ஷன் வெளிப்படை

By செய்திப்பிரிவு

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், ரீத்து வர்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கர் கதாபாத்திரத்துக்கு இணையான பாத்திரத்தில் விஜய் டிவி ரக்‌ஷன் நடித்துள்ளார். வயகாம் 18 நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாததால் வெளியானபோது படம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. ஆனால் நேர்மறை விமர்சனங்கள், பொதுமக்களின் பாராட்டு காரணமாக இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள விஜய் டிவி ரக்‌ஷன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நுழைந்தது பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''2010களின் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்காக கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்காக சிலரை அணுகியபோது என்னிடம் அவர்கள் பணம் கேட்டார்கள். படத்தில் நடிக்க ரூ.50 லட்சத்திலிந்து ரூ.1 கோடி வரை செலவாகும் என்று கூறினார்கள். ரூ.15 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்று என்னை ஹீரோவாக ஆக்குவதாக உறுதியளித்த இயக்குநர் ஒருவரிடம் கொடுத்தேன்.

அந்தப் பணம் என் அம்மா நகைகளை அடகுவைத்து என்னிடம் கொடுத்தது. பணத்தைக் கொடுத்த சில நாட்களில் நான் நடித்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்தப் படக்குழுவினர் மாயமாய் மறைந்து விட்டார்கள்.

அதன்பிறகு சினிமா ஆசை வெறுத்துப் போய், கனவுகளைக் கைவிட்டுவிட்டு குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டேன். ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருந்தது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய எனக்கு யாரும் வேலை தரத் தயாராக இல்லை. எனக்குக் கற்றல் குறைபாடு இருந்தது. ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதுவதை கூட என்னால் பார்த்து எழுத முடியவில்லை. இவ்வளவு ஏன் பரீட்சையில் என் நண்பர்களைப் பார்த்து காப்பி கூட அடிக்கத் தெரியவில்லை. இதனால் பத்தாம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டேன்.

அதன் பிறகு ஒரு பிபிஓ வேலையில் சேர்வதற்காக நண்பர்களோடு சேர்ந்து ஒரு போலி பயோடேட்டா தயாரித்தோம். அதில் என்னை ‘தர ஆய்வாளர்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியென்றால் என்ன என்று கூட எனக்குத் தெரியாது. நேர்காணலுக்குச் செல்லும்போது அலுவலகத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றேன். அங்கே ஊழியர்கள் பேசிக் கொண்டிருந்த சில விஷயங்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த விஷயங்களால், எப்படியோ நேர்காணலில் வெற்றி பெற்றேன். அதற்குப் பிறகு பல வேலைகள். மெடிக்கல் வேலை முதல் துணிக்கடை வேலை வரை. சொந்தத் தொழில் கூட செய்தேன். எதுவும் செட் ஆகவில்லை. ஆனால் அவற்றின் மூலம் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டேன். அதுவே என்னை விஜய் டிவிக்குள் நுழைய வைத்தது.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவகார்த்திகேயனும் சிம்புவும் நான் பேசுவது குறித்துப் பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய ஆசிரியர்களிடம் கேட்டால் என்னைப் பற்றி இதுபோல நல்லதாகச் சொல்லியிருப்பார்களா என்று தெரியவில்லை.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் முக்கியமான கேரக்டர் கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதற்கு ஒப்புக்கொண்ட துல்கர் சலமானுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. சினிமா வாய்ப்புகள் வருவதால் சின்னத்திரையை விட்டுப் போய்விட மாட்டேன். உணவகங்களுக்கோ, வெளியிலோ செல்லும்போது மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். இது சின்னத்திரையால் சாத்தியம். மக்களோடு இணையும் களமாக சின்னத்திரை இருக்கிறது.

சிவகார்த்தியேன் சினிமாவில் வெற்றி பெற்றதுதான் தயாரிப்பாளர்கள் என்னைப் போன்றவர்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணம். இது நம்பிக்கையா அல்லது மூடநம்பிக்கையா என்று தெரியவில்லை. ஆனால் இது தொடர்ந்தால் மகிழ்ச்சிதான்''.

இவ்வாறு ரக்‌ஷன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE