ஆணவக்கொலைகள் குறித்து இயல்பாகக் காட்சிப்படுத்திய படம்: இயக்குநர் பா.இரஞ்சித் பாராட்டு 

By செய்திப்பிரிவு

'கன்னி மாடம்' திரைப்படதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், அப்படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாண்டியர்களின் உள்நாட்டுச் சண்டை, சோழ அரசுகளால் ஏற்பட்ட போர்ச் சூழல் ஆகியவற்றை ஒட்டி சாண்டியல்யனால் எழுதப்பட்ட சரித்திர நாவல் 'கன்னி மாடம்'. இந்நாவலை ஒட்டி, குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமான படம் 'கன்னி மாடம்'.

ஸ்ரீராம், காயத்ரி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 'ஆடுகளம்' முருகதாஸ், கஜராஜ், 'சூப்பர் குட்' சுப்பிரமணி, 'மைம்' கோபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது.

'கன்னி மாடம்' படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் மிகவும் பாராட்டினர். இதனால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் 'கன்னி மாடம்' படத்தைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கன்னி மாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் போஸ் வெங்கட்டுக்கும், அத்திரைப்படக் குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE