நடிகர் பகிர்ந்த போட்டோஷாப் புகைப்படம்: நன்றி சொன்ன ட்ரம்ப் மகள்

பாலிவுட் நடிகர் தில்ஜித் தொஸான்ஜ் பகிர்ந்த ஒரு புகைப்படத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அவரது முதல் அதிகாரபூர்வ பயணம் இது. ட்ரம்ப்புடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப், இவான்காவின் கணவர் ஜாரேட் ஆகியோரும் வந்திருந்தனர்.

இவர்களது வருகையையொட்டி இணையத்தில் பல்வேறு பதிவுகள், புகைப்படங்கள், மீம்கள் பகிரப்பட்டன. இவான்கா இந்தப் பயணத்தில், தாஜ்மகாலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன. இந்தப் புகைப்படங்களை போட்டோஷாப்பில் எடிட் செய்து, தங்கள் புகைப்படத்தை இவான்காவோடு சேர்த்து பலரும் நகைச்சுவையாகப் பகிர்ந்து வந்தனர்.

அப்படி பாலிவுட் நடிகர் தில்ஜித் தொஸான்ஜும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதோடு "என்னை தாஜ்மகாலுக்குக் கூட்டிச் செல் என்று என் பின்னாலேயே நச்சரித்தார். நான் வேறென்ன செய்ய முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இவான்கா, "என்னை அற்புதமான தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி தில்ஜித். நான் என்றும் மறக்க முடியாத அனுபவம் அது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

"நன்றி இவான்கா. இது போட்டோஷாப் இல்லை என்று நான் எல்லோரிடமும் விளக்க முயன்றேன். மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன். அடுத்த முறை கண்டிப்பாக லூதியானா வர வேண்டும்" என்று மீண்டும் தனது நகைச்சுவையைத் தொடர்ந்தார் தில்ஜித். இவரது புகைப்படமும் அதற்கு இவான்காவின் பதிலும் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல், தில்ஜித் போல நகைச்சுவைக்காக போட்டோஷாப் புகைப்படங்கள் பகிர்ந்த பல பதிவுகளை இவான்கா குறிப்பிட்டு, "இந்திய மக்களின் அன்பைப் பாராட்டுகிறேன். நான் நிறைய நண்பர்களைப் பெற்றேன்" என்று பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE