கரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி வீடியோ: மன்னிப்பு கோரினார் சார்மி

கரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டதற்காக நடிகை சார்மி மன்னிப்பு கோரியுள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத் தலைநகர் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்தக் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் 2,912 பேரும், இதர நாடுகளில் 148 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 89,741 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80,026 பேர் சீனர்கள் ஆவர்.

சீனாவில் சிக்கித் தவித்த 760-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மத்திய அரசு கடந்த மாதம் பத்திரமாக மீட்டது. 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் முழுமையாக குணமடைந்து கடந்த பிப்ரவரியில் வீடு திரும்பினர்.

இந்நிலையில் டெல்லி, ஹைதராபாத்தில் தலா ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து நடிகை சார்மி நேற்று தனது டிக் டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ''வாழ்த்துகள் நண்பர்களே. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கரோனா வைரஸ் டெல்லிக்கும், தெலங்கானாவுக்கு வந்துவிட்டதாம். இதை நான் செய்திகளின் மூலம் தெரிந்துகொண்டேன். கரோனா வைரஸ் வந்துவிட்டது'' என்று மிகவும் மகிழ்ச்சியான தொனியில் பேசியிருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வீடியோவைப் பகிர்ந்து பலரும் கடுமையான தொனியில் விமர்சித்து வந்தனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

பின்னர் அந்த வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார் சார்மி. அதில், ''உங்கள் அனைவரின் பின்னூட்டங்களைப் படித்தேன். அந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தில் செய்யப்பட்ட முதிர்ச்சியற்ற செயல் அது. இனிமேல் என் செயல்களின் கவனமாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE