ராதிகா, ராதாரவியுடன் வேலை செய்யத் தயங்கினேன்: ஸ்ரீகணேஷ் 

ராதிகா மேடம், நடிகர் ராதாரவி சாருடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது என்று 'குருதி ஆட்டம்' இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறினார்.

மிஷ்கின் பட்டறையிலிருந்து உருவானவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். 'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் மனிதம் பேசும் முகமாக தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். அலாதியான அன்பின் அடையாளத்தை அசாத்தியமான திரை மொழியில் வெளிப்படுத்தி தனித்தடம் பதித்த இவர் அதர்வா நடிப்பில் 'குருதி ஆட்டம்' படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இறுதிக்கட்டப் பணிகளுக்குத் தயாரான இயக்குநர் ஸ்ரீகணேஷ் படம் குறித்துப் பகிர்ந்து கொண்டவை:

''மிகத் திறமை வாய்ந்த நடிகர்களான அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியையும், கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவத்தையும் தந்தது. அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள். ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை.

திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்படைத்துவிட்டார். ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்குச் செல்லக்கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றிப் படங்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் அவரது படங்களும் மிகப்பிரமாண்டமான இடத்தை அவருக்குத் தரக்கூடியவை.

ராதிகா மேடம், நடிகர் ராதாரவி சாருடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள் வெகு எளிமையாகப் பழகினார்கள்.

பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவில் இருந்த அனைவரின் செல்லமாக மாறிவிட்டார்.

இப்படம் 'எட்டு தோட்டாக்கள்' போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்குத் தரும்''.

இவ்வாறு ஸ்ரீகணேஷ் கூறினார்.

ராக் ஃபோர்டு என்டர்டெய்ன்மென்ட் சார்பாக முருகாநந்தம் இப்படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ளது. கோடைகால விடுமுறையில் 'குருதி ஆட்டம்' வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE