தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்: 'துப்பறிவாளன் 2' சர்ச்சை தொடர்பாக மிஷ்கின் காட்டம்

By செய்திப்பிரிவு

தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று 'துப்பறிவாளன் 2' சர்ச்சை தொடர்பாக மிஷ்கின் காட்டமாகத் தெரிவித்தார்.

'சைக்கோ' படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே, விஷால் நடிக்க 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பை லண்டனில் தொடங்கினார் மிஷ்கின். இந்தப் படத்தில் பிரசன்னா, ரகுமான், கெளதமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வந்தது.

முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்னை திரும்பியது படக்குழு. அப்போதுதான் 'சைக்கோ' படமும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பிறகுதான் 'துப்பறிவாளன் 2' படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பளம் அதிகமாகக் கேட்டார் மிஷ்கின், பட்ஜெட் அதிகப்படுத்தினார் மிஷ்கின், விஷாலுக்கு 15 கட்டளைகள் கொண்ட கடிதம் எழுதினார் மிஷ்கின் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சர்ச்சைக்கு எல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டபோது, "முதலில் என்னைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள். தனித்தனியாக யாருக்கும் பேட்டியளிக்க விரும்பவில்லை. என்னிடம் உள்ள முழுமையான ஆதாரத்துடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளேன். நானும் அமைதியாக இருக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால், தொடர்ச்சியாகத் தவறான தகவல்கள் வெளியாகும்போது வேறு வழியில்லை" என்று காட்டமாகத் தெரிவித்தார் மிஷ்கின்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE