நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்துக்கும் தயார்: ரஜினி 

By செய்திப்பிரிவு

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து புரிதல் வேண்டும் என கடிதம் எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து பேசுவோம் எனவும் ரஜினி குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை போயஸ் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் பிப்ரவரி 29-ம் தேதி சந்தித்து பேசினார்.

நேற்று (மார்ச் 1) ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்தும் பல்வேறு கருத்துகளை ரஜினியிடம் தெரிவித்துள்ளார்கள். “என்பிஆர் காரணமாக முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ரஜினியிடம் விரிவாகக் கூறினோம்” என்று ரஜினியுடான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் பாகவி தெரிவித்தார்.

இந்நிலையில், ஜமாஅத்உலமா சபை நிர்வாகிகளுடனான சந்திப்பு குறித்து ரஜினி தனது ட்விட்டர் பதிவில் சிறு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது:

இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE