முதல் பார்வை - ட்ரான்ஸ்

By செய்திப்பிரிவு

சிறு வயதிலேயே வாழ்வில் இக்கட்டான தருணங்களை சந்தித்து விட்டு அற்புதம் நிகழ காத்திருப்பவர் விஜு பிரசாத். இளம் வயதில் தாயை இழக்கும் விஜு தன் தம்பியுடன் கன்னியாக்குமரியின் கடலோர பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டே பகுதி நேர பேச்சாளராகவும் இருக்கிறார்.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு சோக சம்பவம் விஜுவின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கும் விஜுவுக்கு சாலமன் மற்றும் ஐசக் என்ற இருவரின் மூலம் புது வாழ்க்கை கிடைக்கிறது. சாதாரண பேச்சாளராக இருந்த விஜு மிகப்பெரிய மதபோதகராக மாறுகிறார். தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணிக்கும் விஜுவின் வாழ்வில் திடீர் திருப்பம் ஒன்று நிகழ்கிறது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார். அந்த திடீர் சறுக்கலிலிருந்து விஜுவால் மீள முடிந்ததா? என்பதே ‘ட்ரான்ஸ்’ படத்தின் மீதிக் கதை.

விஜுவாக ஃபஹத் ஃபாசில். இன்று சனிக்கிழமை என்று சொல்வது எப்படி இருக்குமோ அது போல ஃபஹத் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது க்ளீஷேவான விஷயமாகிவிட்டது. முதலில் விஜுவாக இருக்கும்போதும் பின்னர் மதபோதகர் ஜோஷுவா கார்ல்டனாக மாறியபிறகும் 1000 வித்தியாசங்கள். உடல்மொழியிலும் வசன உச்சரிப்புகளை அச்சு அசலான மதபோதகர் ஒருவரை கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார்.

திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியா தன் கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இடைவேளைக்குப் பிறகே வந்தாலும் குறை சொல்லமுடியாத நடிப்பு. சிறிது காட்சிகளே வந்தாலும் ஷௌபின் ஷபிர் மனதில் நிற்கிறார். வில்லனாக கவுதம் மேனன். கொடுக்கப்பட்ட பாத்திரமாக கச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் போத்தன் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இசை, மேக்கிங், நடிகர்கள் தேர்வு என அனைத்துக்கும் மெனக்கெட்டவர்கள் திரைக்கதையிலும் கொஞ்சம் அல்ல நிறையவே கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் ஆரம்ப 20 நிமிட காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆழமாகவும் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அவை. ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் யாவும் மிகவும் மேம்போக்காகவும் எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் எழுதப்பட்டது போல இருக்கிறது.

ஏதோ ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்வது போல மதபோதகர் நேர்காணலுக்கு செல்கிறார் ஃபஹத் ஃபாசில். பல லட்சம் மக்கள் முன்பு பேசப்போகும் மதபோதகரை வெறும் பத்தே நிமிடத்தில் தேர்ந்தெடுத்து விடுவார்களா? விஜுவாக இருக்கும் ஃபஹத் அவ்வளவு பெரிய மதபோதகராக ஆவதன் பின்புலம் வெறும் வசனங்களால் கூட பார்வையாளர்களுக்கு சொல்லப்படவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஃபஹத் ஃபாசிலுக்கு ‘ஸ்ப்லிட் பெர்சானலிட்டி’ என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கான ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. அவருக்கு இருக்கும் பிரச்சனையை தெளிவாக சொல்லாமல் தானும் குழம்பி நம்மையும் குழப்புகிறார் இயக்குநர் அன்வர் ரஷீத்.

அதே போல நஸ்ரியா கதாபாத்திரத்தின் நோக்கமும் தெளிவாக சொல்லப்படவில்லை. வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இதே பிரச்சனைதான் விநாயகன் கதாபாத்திரத்திற்கும். இருவரின் நல்ல நடிப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. பாடல்கள் இல்லாதது மட்டுமே பெரும் ஆறுதல். முதல் பாதியில் இருந்த சிறிய சிறிய சுவாரஸ்யங்கள் கூட இரண்டாம் பாதியில் காணாமல் போகிறது.

நடிப்பு, இசை, தரமான ஒளிப்பதிவு, இன்னபிற தொழில்நுட்ப விஷயங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘ட்ரான்ஸ்’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE