வாழ்க்கையில், பயணங்கள் எப்போதுமே சுகமானவைதான். சொல்லப்போனால், வாழ்க்கையே ஓர் நீண்ட நெடிய பயணம்தான். இந்த வாழ்க்கைப் பயணம் முடிவதற்குள்ளாக, அதற்குள் எத்தனையெத்தனை பயணங்கள்... சுவாரஸ்யங்கள்... அனுபவங்கள். அந்த சுவாரஸ்ய அனுபவங்களில்... ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படமும் ஒன்று!
‘பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும்’ என்கிற விளம்பர வாசகம் போல், ‘பயணங்கள் முடிவதில்லை’ என்று சொல்லும்போதே, நம் மனதுக்குள் மொத்தப் படமும், காற்றடித்து விரிந்து படபடக்கிற புத்தகப் பக்கங்கள் மாதிரி, தடதடக்கத் தொடங்கிவிடும்.
தோழியின் வீட்டுக்கு வருகிறாள் ராதா. அங்கே, தான் எழுதிய கவிதையைப் படித்துக்காட்டுகிறாள். அந்தப் பேப்பர் மாடி அறையின் ஜன்னலில் இருந்து பறந்து, பக்கத்தில் உள்ள ஒண்டுக்குடித்தன போர்ஷனுக்குள் விழுந்துவிடுகிறது.
மீண்டும் அந்தக் கவிதையை, பேப்பரில் எழுதத் தொடங்குகிறாள். அப்போது, அவளுடைய கவிதை, கிடார் இசை உதவியுடன், பாடலாகிறது. அந்தப் பாட்டில் மெய்ம்மறக்கிறாள். அதைப் பாடியவனின் முகத்தை மறுநாள் பார்க்கிறாள்.
ஏழ்மைக்கு வாக்கப்பட்ட, பாட்டிலேயே பசியாறுகிற அந்த இளைஞன் ரவி. உணவுக்கு வழியில்லை. உடுத்திக்கொள்ள நல்ல உடையுமில்லை. அவனுடைய நிலையையும் நிலையே இல்லாத வாழ்க்கையையும் தோழி சொல்ல, உருகிப்போகிறாள் ராதா.
பிறகு, தன் அப்பா கட்டிக்கொண்டிருக்கும் கோயில் விழாவில், அவனுக்குப் பாட வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறாள். பாடுவதற்கு மேடை ஏறுவதற்கு முன்னதாக, மழை வெளுத்தெடுக்கிறது. மனிதர்கள் சிதறி ஓடுகிறார்கள். மழையில் நனைந்துகொண்டே, அழுதுகொண்டே பாடுகிறான். அதுதான் அவனுக்கு முதல் வாய்ப்பு.
அதையடுத்து, தோழியின் உதவியால், டிவி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அவள் மாமா மூலம், பாட வாய்ப்பு வாங்கித்தருகிறாள். ஏற்கெனவே, கோயிலில் பாட வாய்ப்பு தந்தது யாரென்பதும் தெரியாமல், இப்போது டிவியில் வாய்ப்புக்கு யார் காரணம் என்பதும் புரியாமல் டிவி ஸ்டேஷனில் பாடத் தொடங்குகிறான். அப்போது, அவளும் அங்கே இருக்கிறாள். அவன் பாடப் போகும் பாடலை படியெடுத்துக் கொடுக்கிறாள்.
அந்த எழுத்துதான், ரசிகையின் கடிதம், அந்த எழுத்துதான் ‘இளைய நிலை பொழிகிறதே’ கவிதை, அந்த எழுத்துதான் கோயில் வாய்ப்புக்கு வந்த கடிதம்... என்பதை அறிந்து நெக்குருகிப் பாடுகிறான்.
அந்தப் பாடலை, கங்கை அமரன் கேட்கிறார். விசாரிக்கிறார். வரச்சொல்லுகிறார். சினிமாவில் பாட வாய்ப்பு தருகிறார். மிகப்பெரிய ஆளாக, காசும்பணமுமாக, வீடும்வாசலுமாக, பேரும்புகழுமாக வளர்ந்து நிற்கிறார்.
இந்தத் தருணங்களிலெல்லாம் அவனுடனேயே, அவனின் வளர்ச்சிக்காகவே உறுதுணையாக நிற்கிறாள் ராதா.
இந்த சமயத்தில் வெளியூரில் கச்சேரிக்குச் செல்கிறான் ரவி. ராதாவின் அப்பா, அவளிடம், திருமணம் குறித்து அக்கா மகனை, அதாவது அத்தையின் மகனைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லுகிறார். அவள் ரவியைக் காதலிக்கும் விஷயம் சொல்லுகிறார். ‘அவர் ஊர்லேருந்து வந்ததும் கேட்டு சொல்லிடுறேன்’ என்கிறாள்.
ஆனால் ஊரிலிருந்து வந்ததில் இருந்து வேறுவிதமாக இருக்கிறான் ரவி. ராதாவை புறக்கணிக்கிறான். அவள் இல்லாமல் ரிக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்கிறான். பாராட்டு விழாவின் மேடையில், தன்னைப் பற்றி சொல்லப்போகிறான் என நினைத்தவளுக்கு ஏமாற்றம். வெற்றிக்குக் காரணம் உழைப்பு என்று சொல்ல உடைந்துபோகிறாள்.
இதனிடையே, தோழியின் திருமணத்துக்குப் பாடக் கேட்கிறாள் ராதா. ‘15 ஆயிரம் கொடுத்தா பாடுறேன்’ என்கிறான் ரவி. ‘அவகிட்டயே பணம் கேக்கறீங்களா?’ என்று அவள் கேட்க, ‘அவ கல்யாணம்ங்கறதால பணம் கேட்டேன். உன் கல்யாணத்துக்குன்னா ஓசிலயே பாடுவேன்’ என்கிறான் ரவி. நொறுங்கிப் போய் அப்பாவிடம் சொல்லி அழுகிறாள். அவளுக்கு அத்தை பையனுடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் அப்பா.
நிச்சயதார்த்தத்துக்கு, ஊரில் இருந்து வந்திருக்கும் அத்தைபையன் ஒரு டாக்டரும் கூட. அவர் மூலமாகத்தான் பல திடுக்கிடும் உண்மைகள் ராதாவுக்குத் தெரியவருகின்றன. கச்சேரி விஷயமாக ஊருக்குச் சென்ற சமயத்தில், இவரிடம் உடம்பு சரியில்லை என்று செல்ல, அவனுக்கு கேன்ஸர் இருப்பது தெரிகிறது டாக்டருக்கு. இதைச் சொல்ல ராதா கலங்கிக் கதறுகிறாள்.
அங்கே... ரவி, கேன்ஸரால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். இங்கே... ரவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, விஷம் குடித்து போராடிக்கொண்டிருக்கிறாள். ‘கடைசியா உங்களைப் பாக்கணும் ரவி’ என்கிறாள். அடித்துப்பிடித்து, அங்கே செல்ல... இருவரும் விழுந்து, சரிந்து, உயிர் துறக்கிறார்கள்.
கனத்த இதயத்துடன், இறுகிய முகத்துடன், தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள். ஒருமுறை அல்ல பலமுறை படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பயணத்தில் பங்குகொண்டார்கள். ரிப்பீடட் ஆடியன்ஸ், எனும் வெற்றியை முழுவதுமாகச் சுவைத்த படங்களில் ‘பயணங்கள் முடிவதில்லை’யும் ஒன்று.
ரவியாக மோகன். ராதாவாக பூர்ணிமா ஜெயராம் (இப்போது பூர்ணிமா பாக்யராஜ்). மோகனின் தோழனாக எஸ்.வி.சேகர். பூர்ணிமாவின் தோழியாக ரஜினி. அவரின் அப்பாவாக, பூர்ணம் விஸ்வநாதன். அந்த ஒண்டுக்குடித்தன வீடுகளின் ஓணராக கவுண்டமணி. டாக்டராக ராஜேஷ். அவ்வளவுதான் படத்தின் கேரக்டர்கள். அடுத்து முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால், கிடார்!
ஆமாம்... பயணங்கள் முடிவதில்லை படத்தின் மிக முக்கியமான அம்சங்கள்... தெளிவான கதையும் அந்தக் கதைக்குள் இழையோடிய மெல்லிய காதலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிற இசையும்!
அநேகமாக, மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கோவைத்தம்பி எடுத்த முதல் படம் இதுதான் என்பதாக நினைவு. அநேகமாக, மோகன் மைக் மோகனாக, பாடகர் மோகனாக, மிகப்பெரிய ரவுண்டு வந்ததற்கு அச்சாரமிட்ட படமும் இதுதான். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் முதல் படம் இது. ஆனால் மைக் என்பதையும் கடந்து, விதம்விதமான மோகன் நடித்தார் என்பதே உண்மை.
’இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாட்டு ஆரம்பிக்கும் போதே கைத்தட்டினார்கள் ரசிகர்கள். பூர்ணிமாவை வெறுப்பேற்ற... அவருடைய முகம்... அவருடைய கண்கள்... அவருடைய குரல்... என்று ரஜனி சொல்லும் போதெல்லாம் ஒரு பிஜிஎம்... ஒரு ஹம்மிங் என்று விளையாடியிருப்பார் இளையராஜா. அதற்கும் கைத்தட்டல்கள் கிடைத்தன.
எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், ராஜேஷ் இயல்பாக நடித்திருப்பார்கள். வசனங்களும் பல இடங்களில் கவனத்தை ஈர்க்கும். மனதில் பதிந்துவிடும். கவுண்டமணியின் ‘இந்தச் சென்னை மாநகரத்திலே... இப்படிப்பட்ட பில்டிங்கைக் கட்டி...’ என்கிற டயலாக் செம ஹிட்டு.
‘ராகதீபம் ஏற்றும் நேரம்’, ‘தோகை இளமயில் ஆடிவருகிறது’, ஏ... ஆத்தா... ஆத்தோரமா வாரீயா’, சாலையோரம் சோலை ஒன்று’, ‘மணியோசை கேட்டு எழுந்து’, ‘வைகரையில் வைகைக் கரையில்...’ என்று எல்லாப் பாடல்களுமே ஒன்ஸ்மோர் ரகம். இந்தப் படத்தின் பாடல்கள் கொண்ட ரிக்கார்டு செம விற்பனையாகி, ரிக்கார்டு பிரேக் செய்தது.
தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடின. சென்னை, மதுரை மாதிரியான ஊர்களில் 400 நாட்களுக்கும் மேல் ஓடின. திருச்சி, கோவை, சேலம், நெல்லை மாதிரியான ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடின.
‘பாதை முடிந்தபின்னும் பயணம் முடிவதில்லையே...’ என்று நா.முத்துகுமார் ‘பூக்கள் பூக்கம் தருணம்’ பாட்டில் ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரியைப் பாடும் போது கூட, ‘பயணங்கள் முடிவதில்லை’ நினைவுக்கு வந்துவிடுகின்றன.
‘பயணங்கள் முடிவதில்லை’ 1982ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 26ம் தேதி ரிலீசானது. படம் வெளியாகி, 39 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘இளைய நிலா பொழிகிறதே’வைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா’ என்ற குத்துப்பாட்டுக்கு நிகரில்லை என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ‘சாலையோரம் சோலை ஒன்று ஆடும்’ பாட்டுக்கு இணையான மெலடி ஸாங் இல்லை என்று சிலாகித்துக்கொண்டிருக்கிறோம்.
மோகனை மறக்கவில்லை. சாயல் இல்லாத ஹீரோ என்று புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். பூர்ணிமாவின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. கிடார் இசை செவிகளில் தங்கிவிட்டது. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், தமிழ் சினிமா வரலாற்றில் அருமையான இடத்தைப் பதித்துவிட்டார். கோவைத்தம்பியின் படங்கள் மனதில் பதிந்துவிட்டன.
ஆமாம்... தமிழ் சினிமாவுக்கும்... ரசிகனுக்கும்... இந்தப் படத்துக்குமான பயணங்கள் முடிவதே இல்லை!
இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், மோகன், பூர்ணிமா பாக்யராஜ், இளையராஜா என ‘பயணங்கள் முடிவதில்லை’யின் மொத்தக் குழுவினருக்கும், கைநிறைய பூக்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago